சென்னை: அதிமுக புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்தனர். அந்த தீர்மான நகலை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ்கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கி பொறுப்பேற்க சம்மதம் கேட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களின் கோரிக் கையை ஏற்று பொதுச்செயலாளராக சசிகலா சம்மதம் தெரிவித்தார். நேற்று சசிகலா மெரீனா கடற்கரை சென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.


அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்து 12 மணிக்கு பதவியேற்றார். முறைப்படி பொதுச் செயலாளர் பணியினை தொடங்க உள்ள சசிகலாவை வரவேற்க தலைமையகம் விழாக் கோலம் பூண்டுள்ளது.


நேற்றிரவு முதலே போலீசார், அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியின் இரு பகுதிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.


இன்று காலையில் பதவி ஏற்பு விழாவுக்காக போயஸ்கார்டனில் இருந்து சசிகலா புறப்பட்டார். ஜெயலலிதா தலைமைக் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தலைமைக் கழக வாசலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் வரவேற்றனர்.


அதைத் தொடர்ந்து தலைமைக் கழகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர் சசிகலா ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைமை கழகத்துக்குள் சென்று கட்சியின் பொதுச்செயலாளராக முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டார்.



பின்னர் பொது செயலாளருக்கு உரிய இருக்கையில் அமர்ந்து கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



பின்னர் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார்.