தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சுமார் ரூ.66 கோடி சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது இது தொடர்பான வழக்கை பெங்களூரு தனிக்கோர்ட்டு விசாரணை செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விசாரணை செய்த பெங்களூரு கோர்ட் இவர்கள் 4 பேரும் குற்றவாளிகள் என கண்டு, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.


தனிக்கோர்ட்டு 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.


இந்த அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து 2015-ம் ஆண்டு, மே மாதம் 11-ம் தேதி தீர்ப்பு அளித்தார்.


ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும், திமுக பொதுச் செயலாளர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக அப்பீல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் விசாரித்து, இறுதி வாதங்கள் முடிந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தங்களது தீர்ப்பை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வழங்கினர். இந்த தீர்ப்பில், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போகிறது என கூறிய நீதிபதிகள் மற்ற 3 பேர் மீது தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்தனர்.


இந்த 3 பேரும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டது தெரியவந்து இருப்பதாக கூறிய நீதிபதிகள், 3 பேரும் பெங்களூரு தனிக்கோர்ட்டில் உடனடியாக சரண் அடையவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் சரண் அடைந்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இப்போது இந்த தீர்ப்பில் மாற்றம் செய்யக்கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 


ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், அவரது மரணத்தை அடுத்து அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.


இந்த சீராய்வு மனுவை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் விசாரித்தனர். நீதிபதிகள் கர்நாடக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 


சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் சீராய்வு மனு ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி சுப்ரீம் கோர்ட் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.