கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்றையதினமே விலை இல்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறை முடிந்து கடந்த 1-ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளிவைத்தது. அதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தமிழகத்தில் இன்று திறக்கப்பட உள்ளன.
இதற்கிடையே மாணவ - மாணவிகளுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு தயாராக வைத்துள்ளது.
1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, மொத்தம் 4 கோடியே 30 லட்சம் விலை இல்லா பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.