சென்னை: சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக் குறித்து பொது மேடையில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருஙகிணைப்பாளர் சீமான் சவால் விட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தம்பி சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். 30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையைப் புதிய கல்விக் கொள்கையின் மூலம் பலிகொடுத்துவிடக் கூடாது என்ற தனது இனமான கோபத்தை அறச்சீற்றமாக வெளிப்படுத்தினார். அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சிந்திக்கத்தக்கது. நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.


கல்வி என்பது மக்களுக்கான மகத்தான சேவை. அதனை விற்பனைப்பண்டமாக மாற்றி, வணிகமாக்கிப் பொருளீட்ட எந்நாளும் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் பல்வேறு மேடைகளில் எப்பொழுதும் முன்வைத்துக் கொண்டிருக்கும் கருத்துகளையே தம்பி சூர்யா பிரதிபலித்திருக்கிறார். கலைஞன் என்பவன் எப்போதும் மக்களுக்கானவன். அவன் மக்களை மகிழ்விப்பவன் மட்டும் அல்ல. ஒரு துயர் மக்களைச் சூழ்கிறபோது அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுபவனாகவும் இருக்க வேண்டும். அதனைச் செய்வதே ஒரு கலைஞனின் மகத்தான அறம் என்பதை உணர்ந்து, சமூகப் பொறுப்புணர்வோடும், எதிர்காலத் தலைமுறையினர் குறித்த பெருத்த அக்கறையோடும் நெஞ்சுரம் கொண்டு தம்பி சூர்யா பேசியிருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது.


கஸ்தூரி ரெங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளைக் கொண்டு ‘புதிய கல்விக்கொள்கை’ எனும் பெயரில் மும்மொழிக்கொள்கைத் திட்டத்தின் வாயிலாக இந்தியைத் திணித்திட முற்படுவதும், நாடு முழுமைக்குமுள்ள அரசின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த வழிவகைச் செய்வதும், மாநிலங்களின் கல்வி உரிமையை முழுமையாகப் பறிக்கும் கொடுஞ்செயலாகும். பல்வேறு விதமான வாழ்வியல் முறைகளையும், வேறுபட்ட மொழி கலாச்சாரப் பின்புலங்களையும், பல்வேறு வகையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், மாறுபட்ட நிலவியல் அமைப்புகளும் இருக்கிற இந்நாட்டில் ஒரே மாதிரியான தேர்வுமுறையினைக் கொண்டு வருவது சாத்தியமற்றது என்பது மட்டுமல்லாது சமூக அநீதியும்கூட.


ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளையும், அதற்குரிய வசதிகளையும் ஏற்படுத்த முயலாத இந்நாடு ஒரே மாதிரியான தேர்வை மட்டும் நாடு முழுமைக்கும் நடத்த முற்படுவது மிகப்பெரும் மோசடி. 30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையில் தலையிட்டுக் கல்வியை முழுக்க முழுக்கத் தனியார் வசமாக்குவதும், பாடத்திட்டங்களைப் படிப்படியாக இந்துத்துவமயப்படுத்தும், பாஜகவின் நீண்டகாலத் திட்டங்களான, ‘ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே மதம்!’ என்பது போன்ற நோக்கங்களைக் கொண்ட தொடர்ச்சியான சதிச்செயல்களின் இன்னொரு வடிவமே இது. 


கல்வியிலே முதன்மையாகத் திகழுகிற நாடுகள் யாவும் தாய்மொழி வழிக்கல்வியைத் தந்து, அரசே கல்விக்கூடங்களை ஏற்று நடத்தி அந்நாட்டின் அறிவுலகத்தைத் தீர்மானிக்கிறது. ஆனால், இந்நாடு கல்வியை முற்றுமுழுதாக மேட்டுக்குடி மக்களுக்கானதாக மாற்றி வணிகமாக்கிவிட்டது. இத்தகைய அநீதிகளைத்தான் தம்பி சூர்யா சுட்டிக் காட்டி அதற்கெதிராகக் கலகக்குரல் எழுப்பியிருக்கிறார்.


புதிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வரும் சூலை 25 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கடைக்கோடி மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வூட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அவர் இதனைப் பேசியிருக்கிறார். புதிய கல்விக் கொள்கை குறித்து இளைஞர்களிடையே மீண்டும் ஒரு விவாதம் தலையெடுக்க அவரது உணர்வும், உண்மையும் கலந்த பேச்சு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. 


சூர்யாவின் இக்கருத்தை கருத்தால் வெல்ல முடியாத பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர் பெருமக்களும் வழமைபோலத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்க முற்படுவதும், கருத்துரிமையையே கேள்விக்கு உள்ளாக்குவதுமானச் செயல்களில் ஈடுபடுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது.


தம்பி சூர்யாவின் கருத்தைக் கொச்சைப்படுத்தி மடைமாற்ற முயன்று, புதிய கல்விக் கொள்கையைப் புனிதமான கல்விக் கொள்கை போலச் சித்தரித்துத் தம்பி சூர்யாவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் பாஜக தலைவர்கள், அதிமுகவின் அமைச்சர்கள் அக்கல்வி கொள்கை குறித்துப் பொத மேடையில் மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா என்பதுதான் நாங்கள் எழுப்புகிற கேள்வி. அவ்வாறு பொதுமக்கள் முன்னால் புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதத்தை மேற்கொள்ள வக்கற்ற இவர்கள், இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கி இருக்கிற அடிப்படை உரிமையான கருத்துரிமையையே நசுக்கும் வகையில் சூர்யாவின் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவரைத் தனிப்பட்ட முறையில் வசைபாடுவதும் ஏற்புடையது அன்று! அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.


புதிய கல்விக் கொள்கை குறித்தானத் தம்பி சூர்யாவின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி துணையாக நின்று புதிய கல்விக் கொள்கை குறித்துக் கருத்தியல் பரப்புரையும், மிகப்பெரும் களப்பணியும் செய்து அதற்கெதிரான தொடர் முன்னெடுப்புகளைக் கையிலெடுத்து மக்களின் துணையோடு போராடி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இப்புதிய கல்விக் கொள்கையை நாம் தமிழர் கட்சி முறியடிக்கும்.


இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருஙகிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.