கர்நாடகத்தில் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சித்தராமையாவிடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம் மனு கொடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த மனுவில் கூறியதாவது:-


கர்நாடக மாநிலம் அமைவதற்கு முன்பு இருந்து தமிழர்கள் கர்நாடகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். காவிரி பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் எங்கெங்கு வாழ்ந்து வருகிறார்களோ அங்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.


கிரிநகர் போலீஸ் எல்லைக்குள் சந்தோஷ் என்ற கல்லூரி மாணவர், கன்னட நடிகர்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டார். இதனால் அந்த நடிகர்களின் ரசிகர்கள் அந்த மாணவரை தாக்கினர். இந்த சம்பவத்தை வீடியோவில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் கன்னட மற்றும் தமிழ் சேனல்களிலும் வெளியானது.


இதன் காரணமாக தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் சிலர் கோபம் அடைந்து சில விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா தமிழர்களை தாக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.


இந்த சூழ்நிலையில் கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் அப்பாவி தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். வெறுப்பு பிரசாரத்தை யாரும் தூண்டிவிட வேண்டாம் என்று தாங்கள் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்ததற்காக நன்றி தெரிவிக்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.