பிரதமர் மோடிக்கு அப்போ கறுப்புக்கொடி ; இப்போ வரவேற்பா ? - திராவிட மாடலுக்கு சீமான் சரமாரிக் கேள்வி
Seeman Condemns Dmk : எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடி வருகைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது ஆளுங்கட்சி. எதிர்ப்பவர்களை கைது செய்ய முயற்சிமதா
கடந்த வார காலமாக கொஞ்சம் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார். தேயிலைத் தொழிலாளர்கள் பிரச்சனை, இந்தோனேஷிய சிறையில் வாடும் மீனவர்களை விடுக்க வலியுறுத்தல், மின் கட்டண உயர்வு, தாது மணல் விவகாரம், செந்தில் பாலாஜியை சீண்டியது, சீமைக்கருவேல மரத்தை அகற்ற போராடுவது, மெரினாவில் கலைஞர் கருணாநிதியின் பேனா வைப்பதற்கு எதிர்ப்பு என பல்வேறு விவகாரங்களில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்புடன் இயங்கி வருகிறார்.
மேலும் படிக்க | சீமைக்கருவேல மரத்தை அகற்ற செயல் திட்டம் வேண்டும் - சீமான்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. உலகின் பல்வேறு செஸ் வீரர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வந்துள்ளார். ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கும். gobackmodi என்று ஒரு தரப்பும், tnwelcomesmodi என்று ஒருதரப்பும் மாறி மாறி பதிவுகளையிடுவர். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தற்போது சென்னை வந்துள்ளார்.
உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் சென்னையும், மாமல்லபுரமும் வந்துள்ளன. போக்குவரத்து விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புகொடியோ, தவறான பதிவுகளோ, பலூன்களை பறக்க விடுவதோ கூடாது என்றும், சமூக வலைத்தளங்களிலும் தவறாக கருத்துப் பதிவிடுவோர் கண்காணிக்கப்படுவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை ஏவத்துடிப்பதா என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கே அச்சுறுத்தல் விடுக்கும் திமுக அரசின் கொடுங்கோல் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்டை மாநிலமான தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அவர்கள் முதுகெலும்போடும், நெஞ்சுரத்தோடு பிரதமர் மோடியின் எதேச்சதிகாரப் போக்கையும், அரசியல் அத்துமீறலையும் வீரியமாக எதிர்த்து நிற்கும் வேளையில், திமுக அரசு பாஜகவின் பாதம்பணிந்து சரணடைவது இழிவில்லையா? ஆரியத்தை எதிர்க்கத் துப்பற்று, காலடியில் விழுந்து மண்டியிடுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியை பாஜக பி டீம் என்று பிரச்சாரம் செய்தவர்கள் இன்று ராஷ்ட்ரீய சேவா சங்க சேய் கழகமாக செயல்படுவது கொடுமை என்றும் சீமான் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் விரும்பும் நல்லாட்சியைத் தந்திருந்தால், நாங்கள் ஏன் பாஜக அரசை விமர்சிக்கப்போகிறோம்? எல்லாவற்றையுமே மக்களுக்கு விரோதமாகச்செய்தால், விமர்சிக்காது மக்கள் என்ன செய்வார்கள்? கருத்துரிமையின் அடிநாதமான விமர்சனத்தையே ஏற்க முடியாதென்றால், இந்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சிதானே! என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
#GoBackModi என்பது வெற்றுக் கீச்சகக்கொத்துக்குறியல்ல! தமிழர்களோடு காலங்காலமாகப் பகைமைப் பாராட்டி, வஞ்சகத்தின் மூலம் தமிழ்நாட்டை அழிக்கத்துடிக்கும் ஆரிய மேலாதிக்கத்துக்கெதிரான தமிழ்த்தேசிய இனத்தின் அறச்சீற்றம் என்று ஆவேசமடைந்துள்ள சீமான், காவல்துறையின் இந்த பாஜகவிற்கு ஆதரவான செயல்பாடு ஆகப்பெரும் சனநாயகத்தை கட்டிகாக்கும் திராவிட மாடலென்றால் வாழ்க திராவிட மாடல்.!? பாரத் மாதாக்கி ஜே.!? என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இன்னும் 5 வருடங்கள்தான் அப்புறம் தமிழகம் என் கையில் - சீமான் சபதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ