தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் - சீமான் கண்டனம்
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிநியமன முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசுப்பள்ளி ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தின் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர் பணிக்காக இரவு பகல் பாராது முயற்சித்துக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் அரசுப்பணி கனவினை கானல் நீராக்கும் திமுக அரசின் இக்கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு மாதம் வெறும் ரூ 7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்பும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் மட்டுமின்றி அறிவுச்சுரண்டலுமாகும்.
ஏற்கனவே, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதியத்திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைப்படுத்துவேன் என்று வாக்குறுதியளித்து ஏமாற்றி அவர்களின் வாக்கினை பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த திமுக அரசு செய்த பச்சைத் துரோகத்தால் ஆசிரியர்களது ஓய்வூதிய பலன் என்பது மிகச் சொற்பமாகக் குறைந்துபோயுள்ளது.
தற்போது மேலும் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் சூழல் ஏற்படும். ஏற்கனவே தமிழ்நாட்டின் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும் ஏறத்தாழ சரிபாதி அளவிற்கு எவ்வித அடிப்படை உரிமைகளோ, பணிப்பலன்களோ இல்லாமல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு இயங்கும் அவலநிலை நிலவிவருகிறது.
இந்நிலையில், மேலும் பல ஆயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் பணிநியமனம் என்பது பள்ளிக் கல்வித்துறையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே இதேபோன்று ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் தற்போது பணிநிரந்தரம் வேண்டி வீதியில் இறங்கிப் போராடிவருவதால் அரசு மருத்துமனைகளில் அவ்வப்போது மருத்துவசேவை மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டு நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தற்காலிக ஆசிரியர் நியமனத்தால் எதிர்காலத்தில் பணி நிரந்த போராட்டங்களுக்கு வழிவகுப்பதோடு, ஆசிரியர்களது மன உளைச்சலுக்கும், மாணவர்களின் கல்விப் பாதிக்கப்படவும் முக்கியக் காரணமாகவும் அமையும்.
ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் பாதுகாப்பினைக் குழிதோண்டிப் புதைக்கும் விதமாக அக்னிபாத் என்ற பெயரில் தற்காலிக இராணுவ வீரர்களைப் பணி நியமனம் செய்யும் எதேச்சதிகாரச் செயலில் ஈடுபட்டுள்ளதை எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு, அதைவிட அதிமுக்கியமானதும், நாளைய தலைமுறையை உருவாக்க கூடியதுமான பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பது எவ்வகையில் நியாயமாகும்? இத்தகைய பணி நியமனங்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் முறைகேட்டில் ஈடுபடவும், ஊழல் புரியவுமே வாய்ப்பேற்படுத்தும்.
மேலும் படிக்க | ராக்கெட்ரி - நம்பி நாராயணனாக மாறிய மாதவன்... வைரலாகும் வீடியோ
ஆகவே, நாட்டின் எதிர்காலமான மாணவச்செல்வங்களுக்கு அறிவும், ஒழுக்கமும், நற்பண்பும் போதித்து அறப்பணியாற்றும் ஆசிரிய பெருமக்களைத் தேர்வாணையத்தின் மூலம் நிரந்தரப் பணியாளர்களாக மட்டுமே தேர்வு செய்ய வேண்டுமெனவும், தற்காலிக ஆசிரியர் நியமன உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR