இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக து.ராஜா தேர்வு செய்ததை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் அவருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக மதிப்பிற்குரிய அண்ணன் து.ராஜா அவர்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியினையும், அளப்பெரியப் பெருமிதத்தினையும் தருகிறது. ஒரு குக்கிராமத்தில் பிறந்து மிகவும் எளிய பின்புலத்தில் வளர்ந்து தனது அப்பழுக்கற்ற அரசியல் திறத்தாலும், வியத்தகு ஆளுமைப் பண்பாலும் அவர் இத்தகைய உயர் நிலையை அடைந்திருப்பது வருங்கால சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணம்.


காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு எனத் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகள் பலவற்றுக்காகவும், தமிழகத்தின் தலையாயச் சிக்கல்கள் யாவற்றுக்காகவும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதிகேட்டும் அவர் பாராளுமன்றத்தில் குரலெழுப்பி இருக்கிறார். தமிழகத்தின் குரலாய் ஓங்கி ஒலித்திருக்கிறார். இவ்வாறு மண் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்டு அநீதிக்கெதிராக அயராது குரலெழுப்பிக் கொண்டிருக்கிற அண்ணன் து.ராஜா அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பது காலத்திற்கேற்ற சாலச்சிறந்த தேர்வாகும்.


சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் பாசிச சக்திகள் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிற இத்தகைய நெருக்கடியானக் காலக்கட்டத்தில் அண்ணன் து.ராஜா போன்றவர்கள் கட்சியின் உயர் மட்டப் பொறுப்பிற்குச் செல்வது மிகப்பொருத்தமானது. அண்ணன் து.ராஜா அவர்களின் சமூகப்பணி மென்மேலும் தொடர்ந்திடவும், தமிழர்களுக்கான அவரது போர்க்குரல் தொடர்ந்து ஒலித்திடவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.


இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.