இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்வதற்கு அனுமதியளித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவு பெரும் ஏமாற்றமளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணி நடத்தப்பட்டால், சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் குலைக்கப்படுமெனக் கருதி, தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல முன்மாதிரி வழக்குகளில் அறிவுறுத்தியிருக்கிற நிலையில் அதனை ஏற்காது நீதிமன்றம் அனுமதி வழங்கிருப்பதென்பது ஏமாற்றமளிக்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு தமிழகத்தின் பெருவாரியானக் கட்சிகளும், பொது மக்களும் ஒருமித்து எதிர்ப்புத் தெரிவித்திருப்பது தமிழகத்தில் நிலவி வரும் மதநல்லிணக்கமும், சகோதரத்துவ மனப்பான்மையும் சிதைந்துவிடக்கூடாது என்கிற பொது நோக்கத்திற்காகத்தான்! அவ்வுணர்வின் பிரதிபலிப்பாகவே, தமிழக அரசும் அனுமதி வழங்காது பேரணிக்குத் தடைவிதித்தது. மாநிலத்தின் நலன் கருதி, மக்களின் பாதுகாப்பை மனதிற்கொண்டு எடுக்கப்பட்ட இம்முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் இத்தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுகிறது.


மதுக்கடைகளை மூடக்கோரி சமூக ஆர்வலர்களால் தொடுக்கப்படுகிற பொதுநல வழக்குகளில், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாதெனக்கூறி, தட்டிக்கழிக்கும் நீதிமன்றம், மதச்சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக அரசு எடுத்த கொள்கை முடிவைச் செயல்படுத்த விடாததேன்?


மாணவர்கள் மருத்துவம் படிக்க கட்டாயம் நீட் தேர்வு வேண்டுமென்ற அரசின் முடிவை ஏற்கிற நீதிமன்றம், இப்பேரணி விவகாரத்தில் மட்டும் விதிவிலக்கைக் கடைபிடிப்பதேன்?


மேலும் படிக்க | மேற்கு வங்க கவர்னருக்கு உடல்நலக்குறைவு - சென்னை மருத்துவமனையில் அனுமதி


சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படுமெனக்கூறி எடுத்துரைத்தும், நீதிமன்ற அவமதிப்பெனக்கூறி, பேரணியை அனுமதிக்க வலியுறுத்துகிற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதானா?


காவிரி நதிநீர் உரிமையிலும், முல்லைப்பெரியாறு நதிநீர் உரிமையிலும் தீர்ப்பாயமும், நீதிமன்றமும் நீரைத் திறந்துவிடக்கூறியும் நீர்தராத மாநில அரசுகள் மீது பாயாத நீதிமன்ற உத்தரவுகள், இவ்விவகாரத்தில் அக்கரை காட்டுவதேன்?


பெரும்பான்மை மக்களால் தேர்வுசெய்யப்பட்ட இறையாண்மையுள்ள மாநில அரசின் நிர்வாக முடிவைப் புறந்தள்ளிவிட்டு நீதிமன்றம் அப்பேரணிக்கு அனுமதி வழங்குவதற்கு ஒப்புதல் கொடுத்தது அம்மக்களை அவமதித்ததாகாதா?


எல்லாவற்றையும் மீறி அப்பேரணி நடைபெறும்பட்சத்தில் அதில் ஏதேனும் கொடுஞ்செயல்கள், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றால் அதற்கு யார் பொறுப்பேற்பது?


தமிழகத்தின் பொது அமைதியைக் கருதி, சட்டம் ஒழுங்கை காக்க மாநில அரசு எடுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்முடிவைக்கூட நீதிமன்றங்கள் ஏற்க முன்வராதென்றால், மாநிலத்தை ஆள்வது நீதிமன்றமா? சட்டமன்றமா? எனும் எளிய மக்களின் கேள்விக்கு என்னப் பதிலுண்டு?


மேலும் படிக்க | ஓசி பயணம் வேண்டாம் என பேசிய மூதாட்டி மீது வழக்கு பதிவு!


ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எந்தக் காலத்திலும் அனுமதி வழங்கக் கூடாதென தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இதுவரை தமிழகத்தை ஆண்ட அரசுகள் அனுமதி வழங்காத நிலையில், தற்பொழுது ஆளும் திமுக அரசு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறாது, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையையே ஒரு காரணமாகக் கூறுவது வலுவற்ற வாதமில்லையா? காந்தி ஜெயந்தி அன்று மட்டுமல்லாது எந்த நாளில் பேரணி நடத்தினாலும் தமிழகத்தின் அமைதி குலையுமென வாதிட வேண்டிய தமிழக அரசு, மற்ற நாட்களில் நடத்துவது சிக்கலில்லை என உயர் நீதிமன்றத்தில் கூறியிருப்பது மோசடித்தனமில்லையா? எதற்கு இந்தக் குழப்பவாதம்? இரட்டைவேடம்?


ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு சீரியக் கவனமெடுத்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணிக்கான தடையை சட்டப்படி உறுதிசெய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata