செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க என்ன காரணம்? - நீதிபதி விளக்கம்
Senthil Balaji Bail Rejected: செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், செல்வாக்கான நபராகவே நீடிக்கிறார் எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கில் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது.
அமலாக்கத்துறை எதிர்ப்பு
குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயார் என வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பின் இந்த வாதங்களை மறுத்த அமலாக்க துறை தரப்பு, எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்டன. செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி
இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராக உள்ளதால் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனுவில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி சொல்லியிருப்பது என்ன?
அதேசமயம், செந்தில் பாலாஜி, கடந்த எட்டு மாதங்களாக சிறையில் உள்ளதால், இந்த வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை எம்.பி. எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆதாரங்கள் திருத்தப்பட்டிருப்பதாக முடிவுக்கு வர எந்த காரணங்களும் இல்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார். ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானதுதான், அதன் மதிப்பை சந்தேகிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் செல்வாக்கு
இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து செந்தில்பாலாஜி குற்றம் புரியவில்லை என நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் சாட்சிகளை கலைக்க மாட்டார் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும், ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்புதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். சிறையில் இருந்த 8 மாதங்களில் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்ததன் மூலமும், அவருக்கு மாநில அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளதிலிருந்தும், அவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதையே காட்டுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சாட்சிகள் அச்சுறுத்தல்
அமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும் கூட ஆளும்கட்சியின் எம்.எல்.ஏ.-வாக நீடிப்பதால் அரசில் அவருக்கான செல்வாக்கு தொடர்கிறது என்று முடிவிற்கு வர எந்த தயக்கமும் இல்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கில் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் சாட்சிகளாக இருப்பதால் அவர்கள் அச்சுறுத்தப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் புகார்தாரர்களுடன் சமரசம் செய்யப்பட்டதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி ஏன்?
அதிகார துஷ்பிரயோகம் செய்து வேலைக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், பொது நலனை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் பெற தகுதியில்லை என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. செந்தில் பாலாஜி ஜாமீன் பெற எந்த தகுதியும் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 8 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்து வருவதால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ