நீதிமன்றம் விடுவித்த போதும், திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதற்குப் பல சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டுத் திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 


இந்நிலையில், நேற்று மாலை (ஆகஸ்ட்-10) சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், திருமுருகன் காந்தி தேச விரோதமாக ஒன்றும் பேசவில்லை எனக் கூறி நீதிமன்ற காவலுக்கு அவரை அனுப்ப மறுத்து விடுவித்தது. நீதிமன்றத்துக்கு வெளியில் வந்த திருமுருகன் காந்தியை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.


அப்போது வாரண்ட் இல்லாமல் கைது செய்வது சட்டவிரோதமானது என்றும், அதனால் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது என்றும் திருமுருகன் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இந்நிலையில் நீதிமன்றம் விடுவித்த போதும், திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதற்குப் பல சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.