கோயம்பேடா... கிளாம்பாக்கமா... கரார் காட்டும் அமைச்சர் - பயணிகளுக்கு தொடரும் குழப்பம்!
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேடில் இருந்துதான் பேருந்தை இயக்குவோம் என கூறிவந்த நிலையில், அதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்' கடந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு, சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அப்போது அறிவித்தது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வாதம்
முதல்கட்டமாக, தமிழ்நாடு அரசின் விரைவுப் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை முன்பதிவு ஏற்கெனவே செய்யப்பட்ட காரணத்தால் தனியார் ஆம்னி பேருந்துகள் மட்டும் ஜனவரி 24ஆம் தேதி வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திய பிறகே அங்கிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதுவரை கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தனர்.
மேலும் படிக்க | ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
கரார் காட்டும் அமைச்சர்
இந்நிலையில், இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,"அரசு விரைவுப் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும்போது ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்து இயக்குவதுதான் சரியாக இருக்கும். எனவே, ஜன. 24ஆம் தேதிக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும்" என உறுதிபட தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜன. 20ஆம் தேதி அன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், கிளாம்பாக்கத்திற்கு பொதுமக்கள், பயணிகள் வந்து செல்வதற்கு மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம், போதிய அளவு புறநகர் மற்றும் மாநகர பேருந்து சேவை போன்ற எந்தவிதமாக இணைப்பு வசதிகளும் இல்லை என்பதால் பொதுமக்களும் பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றார்கள் என தெரிவித்தார்.
மேலும், 1000-க்கும் மேற்பட்ட தங்களது ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தம் செய்வதற்கான இடம் மற்றும் பேருந்துகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான பணிமனையும் கிடையாது என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்
ஏன் கோயம்பேடு?
அதேபோன்று, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் ஓலா, உபேர் போன்ற கார், ஆட்டோ வசதிகளை பயன்படுத்துவதற்கு ரூ.1300 முதல் ரூ.1500 வரை செலவாகின்றதால், பயணிகள் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறிப்பிட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம், மாநகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகள் இவை அனைத்தும் வரும் வரை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடில் இருந்து இயக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இருப்பினும், பயணிகளை ஏற்ற ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் நிலையத்திற்குள்ளே சென்று செல்லும் என்பதையும் தெரிவித்திருந்தார். மேலும், சென்னையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மைய பகுதியாக அமைந்துள்ளதாலும் மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம், புறநகர் மற்றும் மாநகர பேருந்து சேவை மற்றும் ஷேர் ஆட்டோ போன்ற அனைத்து விதமான இணைப்பு வசதிகளும் உள்ளதாலும் அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பயணிகளும் சுலபமாக வந்து செல்வதற்கு வசதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்
தற்போது அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என அறிவித்துள்ளது பயணிகளிடையே சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜன. 24ஆம் தேதிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இதற்கு ஒரு முழுமையான தீர்வை அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க | மீண்டும் சூடுபிடிக்கும் தமிழக அரசியல்! உயர்நீதிமன்றத்தில் உதயநிதி பதில் மனு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ