கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: இராமதாசு கோரிக்கை
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவு கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அணு உலைகள் அமைக்கப்படுவதால் மக்களை அச்சத்தில் உறைந்திருக்கின்றன நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவு கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருட்களை தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான அணுக்கழிவு மையம் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி இராதாபுரத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அணு உலைகள் அமைக்கப்படுவதால் அச்சத்தில் உறைந்திருக்கும் மக்களை கலவரப்படுத்தும் வகையிலான இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்திய அணுமின் கழகத்தின் சார்பில் இரு அணு உலைகளை அமைத்துள்ளன. மூன்றாவது, நான்காவது அணுமின் உலைகளை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அணுமின் உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட அணுசக்தி எரிபொருட்களை பாதுகாப்பாக வெகுதொலைவுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
இதற்காக தற்காலிக அணுக்கழிவு மையமும் (Away From Reactor -AFR), பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு மையமும் (Deep geological repository - DGR) அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இவற்றில் தற்காலிக அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் மற்றும் விஜயபதி கிராமங்களில் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது குறித்து விவாதிப்பதற்காகத் தான் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்திருக்கிறது.
கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பது மிகவும் ஆபத்தானது ஆகும். அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் அணுக்கழிவுகள் அணு உலை வளாகத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வைத்து குளிர்விக்கப்பட வேண்டும். அதன்பின்னர் அவை தற்காலிக அணுக்கழிவு மையத்திலும், பின்னர் நிரந்தர அணுக்கழிவு மையத்திற்கும் பாதுகாப்பான முறையில் மாற்றப்பட வேண்டும்.
கடந்த 2013-ஆம் ஆண்டில் முதலாவது அணு உலை செயல்பாட்டுக்கு வந்த நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில், அதாவது 2018-ஆம் ஆண்டிற்குள் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தற்காலிக மையம் அமைக்கப்படாத நிலையில், 2022-ஆம் ஆண்டுக்குள் அதை அமைக்க அணுமின்கழகம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது.அதன்படி தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பதற்காகவே கூடங்குளம் - விஜயபதி கிராமங்களை அணுமின் கழகம் தேர்ந்தெடுத்துள்ளது.
2018-ஆம் ஆண்டிற்குள் அணுக்கழிவு மையம் அமைக்கப்படாததற்கு காரணம் என்ன என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றம் கேட்ட போது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா அளித்த பதில் என்ன தெரியுமா? ‘‘தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான தொழில்நுட்பம் இன்னும் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை’’ என்பது தான்.
கூடங்குளம் அணுமின் உலைகள் மென்நீரில் இயங்கக்கூடியவை என்பதால் அதற்கான தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது என்றும் அவர் கூறியிருந்தார். முழுமையான தொழில்நுட்பமும் இல்லாமல், தெளிவான இலக்கும் இல்லாமல் அமைக்கப்படும் அணுக்கழிவு மையம் எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்?
கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பதுடன் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தற்காலிக மையத்தில் உள்ள அணு எரிபொருட்கள் மிகவும் அதிக ஆழத்தில் அமைக்கப்பட்ட நிரந்தர மையத்திற்கு மாற்றப்பட வேண்டும். ஆனால், அத்தகைய மையத்தை எங்கு அமைப்பது? என்பதே இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
நிரந்தர அணுக்கழிவு மையத்தை கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள சுரங்கங்களில் அமைக்கலாம் என 2012-ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மிகக்கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அங்கு நிரந்தர மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் புதிய இடம் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அதற்கான தொழில்நுட்பத்தை இந்தியா இன்று வரை உருவாக்கவில்லை.
எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல், எந்தத் தொழில்நுட்பமும் இல்லாமல் பெயரளவில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு நிலநடுக்கம் தாக்கிய போது மிகப்பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதற்கு காரணம் புகுஷிமா அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணுசக்திக் கழிவுகள் முறையாக பராமரிக்கப்படாதது தான். இதையெல்லாம் உணராமல் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட்டால், ஜப்பானில் ஏற்பட்டது போன்ற கதிர்வீச்சு உள்ளிட்ட ஆபத்துகள் தென் தமிழகத்திலும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.
கூடங்குளம் பகுதி மக்களின் பாதுகாப்பு, அப்பகுதியின் சுற்றுச்சூழல், கடல் சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக குரல் கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு உள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியதற்காக இரு வழக்குகளை சுமந்ததுடன், சிறைவாசமும் அனுபவித்தவன் நான். அந்த அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தற்காலிக அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் பகுதியில் அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என்பது தான்.
தற்காலிக மற்றும் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு பாதுகாப்பான இடம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறுதி செய்த பிறகு, அதற்கான பணிகளை அரசு தொடங்கினால் போதுமானது. இப்பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும் வரை கூடங்குளம் அணு உலைகளை தற்காலிகமாக மூட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.