TN மற்றும் புதுவையில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!
தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று மாலையும் இரவிலும் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
ஈரோடு, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. பவானி லட்சுமி நகர் பகுதியில் கழிவுநீர்க் கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர். திண்டுக்கல் மற்றும் மாவட்டத்தின் இதரப் பகுதிகளான சீலப்பாடி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலச்சந்திரன், "தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கும், காவிரி டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கசெல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகவும், சென்னையில் அவ்வபோது சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார்.