ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு மவுன போராட்டம்!!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு, தன் வீட்டு முன்பு குடும்பத்தாருடன் கறுப்பு உடையணிந்து மவுனமான முறையில் போராட்டம் நடத்தினார்.
ஜல்லிக்கட்டுக்காக மாநிலம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றனர். அரசியல் கட்சியினர், மாணவர்கள், திரையுலகினர் என பலரும் போராட்டகளத்தில் குதித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிம்பு பேசினார். இன்று தமிழக மக்கள் அவரவர் இருக்கும் இடத்தில் 10 நிமிடம் எழுந்து நின்று மவுன போராட்டம் நடத்துங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று நடிகர் சிம்பு தி.நகரில் உள்ள வீட்டு முன்பு கறுப்பு உடையணிந்து மவுன போராட்டம் நடத்தினார். அவருடன் அவரது அம்மா உஷா, அப்பா டி.ராஜேந்தர் உள்ளிட்ட குடும்பத்தாரும், ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிம்பு கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்காக வந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி, என்னாலும் கூட்டம் திரட்ட முடியும் என்பதற்கு இது தான் சாட்சி. சிம்பு படத்தில் மட்டும் தான் ஹீரோ என்று நினைக்க வேண்டாம். என் பின்னால் யாரும் வர வேண்டாம், நீங்கள் முன்னாடி போங்கள் நான் உங்கள் பின்னால் வருவேன். போகும் போது எதையும் எடுத்து கொண்டு போக முடியாது, கொடுத்துவிட்டு போகலாம். இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரணும், கண்டிப்பாக நடக்கும், இது ஆரம்ப கட்டம் தான். எனக்கு இந்த மாதிரி ரசிகர்கள் கிடைத்தது மகிழ்ச்சி. தமிழனாக பிறந்தது மகிழ்ச்சி என்று கூறினார்.