திருநெல்வேலி மாட்ட மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகத்தில் குட்டி விமானம் ஒன்று பறந்ததால் சற்று நேரம் பதற்றம் நிலவியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகம் உள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த வெள்ளி அன்று இரவு 11.51 மணி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 12.10 மணிக்கு 2 விமானங்கள் மிகவும் தாழ்வாக மகேந்திரகிரி மலையைச் சுற்றியபடி, இஸ்ரோ வளாகத்தின் மேல் குட்டி விமானங்கள் பறந்ததாக கூறப்படுகிறது. 


சுமார் 500 மீட்டர் உயரத்தில் இந்த விமானம் பறந்ததாகவும், அதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பார்த்ததாகவும் தெரிகிறது.


இதுதொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இஸ்ரோ அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக் டர் ரவீந்திரன் எழுத்துப்பூர்வமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறை அதிகாரிகள், இஸ்ரோ மைய வளாகத்தில் குட்டி விமானம் பறந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.


குட்டி விமானம் பறந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரோ மைய வளாகத்தில் மர்மமான முறையில் குட்டி விமானம் பறந்ததாக கூறப்படுவது இது முதல் முறை அல்ல.


முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு இதேபோன்று விமானம் பறந்ததாக வந்த தகவலின்பேரில் அங்குள்ள மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பின்னர் 2017-ஆம் ஆண்டும் குட்டி விமானம் பறந்ததாக இஸ்ரோ சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.