தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
அடுத்த 24 மணிநேரத்திற்குள் தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் துவங்கியது. இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியில் மழை பதிவாகியுள்ளது. தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது, தற்போது மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும், மாலத்தீவு பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும், அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெயும். சென்னையை பொருத்த வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்.