சென்னை: உயிர் பிழைப்பதற்காகத் தமிழகத்திற்கு அடைக்கலமாக வரும் ஈழத்தமிழர்களை சிறப்பு முகாமிற்குள் அடைத்து வைத்திருப்பது பெரும் கண்டனத்துக்குரியது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:


சிங்கள அரசின் இனவெறித் தாக்குதல்களில் இருந்து தப்பி, உயிர் பிழைப்பதற்காகத் தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை, இந்திய அரசு பல வழிகளிலும் அடக்கி, ஒடுக்கி வருகின்றது. தமிழ்நாட்டில் சந்தேக வழக்குகளில் கைதாகின்ற இளைஞர்களை விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பது வழக்கம். ஆனால், ஈழத்தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையும் இன்றி, செங்கல்பட்டில் இருந்த சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் பூட்டி வைத்தனர். இப்போது அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி, அங்கே அடைத்து வைத்து இருக்கின்றார்கள்.


எந்தவிதமான குற்றச்சாட்டுப் பதிவும் இல்லாமல், வழக்கு விசாரணையும் இல்லாமல், எப்போது விடுதலை என்பதும் தெரியாமல், இளமைக் காலம் முழுமையும் சிறைக்கு உள்ளேயே அடைபட்டுக் கிடந்த இளைஞர்கள், தங்களை விடுவிக்கக் கோரி எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்காமல், புறக்கணித்து வருகின்றது. இந்திய அரசு, ஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரைப் போல நடத்தி வருகின்றது. இது மனித உரிமைகளுக்கு எதிரானது.


நான் பல அகதி முகாம்களைப் பார்வையிட்டு, அங்கே உள்ள அவலநிலையை நேரில் கண்டு அறிந்தேன். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. கழிப்பு அறைகளின் பக்கமே போக முடியவில்லை. கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலை போலத்தான் இருக்கின்றன. அவர்களது வேதனைக் கண்ணீரைப் பல மேடைகளில் எடுத்துக் கூறி இருக்கின்றேன்.


ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஈழத்தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று மதித்து, உதவிகள் அளித்து, குடிஉரிமையும் வழங்கி இருக்கின்றன. ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்து இடவில்லை.


ஆனால், இந்தியாவில் குடிஉரிமை கோருகின்ற ஈழத்தமிழர்களுடைய விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என, நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. எனவே, இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; அத்தகைய முகாம்களை அடியோடு நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.