திமுக திட்டங்களுக்கு பெயர் சூட்டிய அதிமுக பேச என்ன தகுதி இருக்கிறது? - முதலமைச்சர்
திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர்சூட்டிய அதிமுக, திமுக அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 90-வது ஆண்டாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீரை திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கிடும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியான முன்னெடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதுடன் கடை மடை வரை தண்ணீர் சென்றடைவதும் உறுதிப் படுத்தப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 17.76 லட்சம் டன் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது என்றார்.
மேலும் படிக்க | வரப்பில் டிம்பர் மரங்கள்... வயலில் பாரம்பரிய நெல் ரகங்கள்...வளம் தரும் விவசாயம்!
எடப்பாடிக்கு முதலமைச்சர் பதிலடி
தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே திமுக அரசு திறந்து வைத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது அதிமுக தான் அப்படி செய்தது. திமுக திட்டங்களுக்கு பெயர் சூட்டிய கட்சி அதிமுக என்று விமர்சித்தார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார். இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் விளக்கமளித்தார்.
மோடி மீது அமித்ஷாவுக்கு கோபம்
தமிழகத்தைச் சேர்ந்த இருவரை பிரதமராக விடாமல் திமுக தடுத்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், இதுதொடர்பாக அமைச்சர் அமித்ஷா வெளிப்படையாக சொன்னால்தான் விளக்கம் அளிக்க முடியும் என்றார். மேலும், தமிழர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த தமிழிசை, முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் மோடி மீது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு என்ன கோபம் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
வரி செலுத்துவதில் தமிழகம் முதலிடம்
திமுக-காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழகத்திற்கென பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் போது தமிழகத்திற்கென கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து கேட்டதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றார். மத்திய திட்டங்களுக்கு தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தொடர்பான விவரங்களை மட்டுமே பாஜக கூறியுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசில் இருந்து பொதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே வெளி வந்துள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் தமிழகம் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாகவும், ஆனால் தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிதி குறைவாகவே வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ