சென்னை: ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைத்த முதல்வரையே மிரட்டி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் என்றால் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை, சசிகலா செயல்படவே விடவில்லை என்பது அவரது பேட்டி மூலம் தெரியவருகிறது. இதைத்தான் திமுக சார்பில் தொடர்ந்து கூறினோம். தமிழகத்திலுள்ள எல்லா தரப்பு மக்களுமே, அதிமுகவை சேர்ந்த தொண்டர்களும் இதைத்தான் சொன்னார்கள். இப்போது ஓ.பி.எஸ்பேட்டி நிரூபித்துள்ளது. 


அனைத்துமே இந்த ஆட்சியில் பெரிய மர்மமாக இருந்து கொண்டுள்ளது. முதல்வரையே மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியுள்ளனர். ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த முதல்வருக்கே இந்த கதி ஏற்பட்டுள்ளது. மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 


இப்போதைக்கு தமிழகத்தில் அரசாங்கம் என்பதே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைய ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஆட்சி ஒன்று இப்போது தமிழகத்தில் அமைந்தாக வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கூட மர்மமாக உள்ளது. ஓ.பி.எஸ் கூறியதை வைத்து பார்த்தால் மர்மங்கள் மிக அதிகமாக உள்ளது. முதல்வரின் செயலாளர்கள் திடீரென ராஜினாமா செய்வதும் மர்மமாக உள்ளது. 
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.