ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு குமரெட்டியாபுரம் மக்கள் தங்கள் போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டம் அருகில் உள்ள 13 கிராமங்களுக்கும் பரவியது. போராட்டத்தின் 100 ஆவது நாளில் ஆட்சியர் ஆலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் கலவரம் மூண்டது. 


கடந்த மே மாதம் 22 ஆம் தேதி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடும் தடியடியும் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததன் ஓராண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட உள்ளது. 


இந்நிலையில், வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. தூத்துக்குடி முழுவதும் 2000 போலீஸ் மற்றும் 26 சுங்கச் சாவடிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறியுள்ளார்.


இதை தொடர்ந்து, குமரெட்டியாபுரம் கிராமத்தில், ஊர்பொது இடத்தில், இறந்தவர்களின் புகைப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மழலை முதல் முதியவர்கள் வரை கருப்பு உடை அணிந்து, பொதுஇடத்தில் ஒன்று திரண்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறிது நேரம் முழக்கம் எழுப்பிய அவர்கள், இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.