புயலால் மேற்கூரை சேதமடைந்துள்ள வீடுகளில், தற்காலிகமாக கூரை அமைத்துக் கொள்ள தார்ப்பாய் ஷீட்டுகளை விநியோகிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயல் பாதித்த பகுதிகளில், நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களுக்கு உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பால், வேட்டி, சேலை, பாய், போர்வை போன்ற வசதிகளும்,  மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.


‘கஜா’ புயல் மற்றும் கன மழையின் தாக்கத்தினால் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும் வழங்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதியதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவித்திருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர், மழையிலிருந்து வீடுகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக கூரை மேல் தற்காலிகமாக போடுவதற்கு தார்ப்பாய் ஷீட்டுகள் அளித்தால் உதவிகரமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து  கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக கூரை அமைத்துக் கொள்ள தார்ப்பாய் ஷீட்டுகளை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.


முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக தார்ப்பாய் ஷீட்டுகளை வாங்கி, உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.