தமிழ்நாட்டு உழவர்கள் நலனை பாதிக்கும் வகையிலான மத்திய அரசின் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


சென்னை & சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், சாலைக்கான நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு உழவர்கள் நலனை பாதிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.


8 வழி பசுமைச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் தான் இத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்தது.  பாதிக்கப்படும் வாய்ப்புள்ள உழவர்களை நேரில் சந்தித்த நான், அவர்கள் தெரிவித்தக் கருத்துகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்து இந்தத் திட்டத்துக்கு தடை பெற்றேன். அந்தத் தடையை எதிர்த்து தான் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்திருக்கிறது. மத்திய அரசின் சார்பில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்பதை உணர்ந்து தான் உச்சநீதிமன்றத்தில் எனது சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.


உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது எனது கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் இருக்கும் நிலையில், வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், அரூர், மஞ்சவாடி வழியாக சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை (179 ஏ) நான்குவழிச் சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் புதிய சாலை தேவையில்லை என்பதையும் எனது தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறுவார்கள். அதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.


அதுமட்டுமின்றி, சென்னை & சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தேவை இல்லை என்பதை முழு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவோம். மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடச் செய்ய பா.ம.க. போராடும்; வெற்றி பெறும்.


சென்னை & சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரை அது தமிழகத்திற்கு தேவையில்லாத திட்டம்; உழவர்களை பாதிக்கும் திட்டம் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. ஆனால், இவ்விவகாரத்தில் திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடக்கம் முதலே இரட்டை வேடம் போட்டு வருகின்றனர். சென்னை& சேலம்  8 வழிச்சாலைத் திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு  அவசியமானது, அதை செயல்படுத்தியே தீர வேண்டும் என்று சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் பேசி வந்த ஸ்டாலின், மக்களவைத் தேர்தலின் போது வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக  அத்திட்டத்தை எதிர்ப்பது போல நாடகமாடினார். அந்த நாடகத்தை அப்பாவி உழவர்களும் நம்பினார்கள்.


ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியோ, நானோ அப்படிப்பட்டவர்கள் அல்ல. உழவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கத் தொடங்கினோம். 8 வழிச் சாலைத் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, உழவர்களின் நிலங்கள் அவர்களுக்கே சொந்தம் என்பது உறுதி செய்யப்படும் வரை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும் என்று உறுதியளிக்கிறேன்.


இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.