வரப்பில் டிம்பர் மரங்கள்... வயலில் பாரம்பரிய நெல் ரகங்கள்...வளம் தரும் விவசாயம்!
வருடத்திற்கு 2 போகம் நெல்லும், ஒரு போகம் உளுந்து, வேர்கடலையும் போட்டு வருடம் முழுக்க வருமானம் ஈட்டும் காஞ்சிபுரம் விவசாயி ரவிக்குமார் குறித்து இதில் காணலாம்.
உற்பத்தி, உற்பத்திக்கு ஏற்ற விலை ஆகிய இரண்டும் தான் விவசாயியின் பொருளாதார வளத்தை தீர்மானிக்கும் அடிப்படை காரணிகள். இதை நன்கு புரிந்து கொண்டு லாபகரமாக விவசாயம் செய்து வருகிறார் காஞ்சிபுரம் விவசாயி ரவிக்குமார். சாம்சனுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை நிர்வகித்து வரும் ரவிக்குமார் மூன்று போகம் சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.
இயற்கை உரம்
"ஒரு ஏக்கர்ல தூய சம்பா, சீரக சம்பா மாதிரியான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறேன். நெல் வயலின் வரப்பில் தேக்கும், மகோகனியும் சேர்த்து 120 மரங்கள் நட்டுள்ளேன். முழுவதும் இயற்கை விவசாயம் தான் மேற்கொள்கிறேன். ரசாயனம் பயன்படுத்துவது கிடையாது. நாட்டு மாட்டின் சாணம், கோமியத்தில் இருந்து ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், பஞ்ச கவ்யம் தயாரித்து இயற்கை உரமாக பயன்படுத்துகிறேன். அதனுடன், மரங்களில் இருந்து விழும் இலை, தளைகளும் மண்ணுக்கு உரமாகிறது.
இதனால், என்னுடைய நிலத்தில் மண் புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகி மண் வளமாக இருக்கிறது. பயிரும் சிறப்பாக வளர்கிறது. வருடத்திற்கு 2 போகம் நெல்லும், ஒரு போகம் உளுந்து, வேர்கடலையும் போட்டு வருடம் முழுக்க வருமானம் வரும் அளவில் பார்த்துக்கொள்கிறேன்.
நேரடி விற்பனை
இதேபோல், மீதமுள்ள நிலத்தில் 10க்கு 10 அடி இடைவெளி விட்டு 350 டிம்பர் மரங்களை நட்டு அதற்கிடையில் வேர்க்கடலை 2 போகம் ஊடுப்பயிராக போட்டு வருகிறேன். வெண் கடம்பு, செம்மரம், மகோகனி ஆகிய மரங்களை கலந்து வளர்த்து வருகிறேன்" என்றார்.
வேர்கடலையை நேரடியாக விற்காமல், அதை கடலை எண்ணெயாக மாற்றி மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறார். கடலை புண்ணாக்கை மாட்டு தீவனமாகவும், இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தி கொள்கிறார். அதேபோல், நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்கிறார்.
ஈஷா நர்சரியின் மிளகு கொடி
"ஒரு ஏக்கரில் ஒரு போகத்துக்கு 17 மூட்டை வரை நெல் அறுவடை எடுக்குறேன். ஒரு மூட்டை 80 கிலோ இருக்கும். அதை அரிசியாக மாற்றி ரகத்திற்கு ஏற்ப கிலோ ரூ. 65 முதல் ரூ.80 வரை நேரடியாக விற்பனை செய்கிறேன். இதேபோல், மரத்திற்கு நடுவில் ஊடுபயிரா போட்டுள்ள, வேர்கடலையில் இருந்து 67 கிலோ எண்ணெய்யும், 50 கிலோ புண்ணாக்கும் கிடைக்கிறது. ஒரு கிலோ கடலை எண்ணெய் ரூ. 280இல் இருந்து ரூ.350 வரை விற்பனை செய்கிறேன்" என்றார், ரவிக்குமார்.
இவர் முப்போகமும் பயிர் செய்வதால் 3 மாதத்திற்கு ஒரு முறை தொடர் வருமானம் வந்து கொண்டே இருக்கிறது. 15 வருடங்கள் கழித்து அவர் நட்டுள்ள டிம்பர் மரங்களில் இருந்து ஒரு பெரும் தொகை வருமானமாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதற்கு இடையில் வரப்போரம் இருக்கும் பனை மரங்களில் ஈஷா நர்சரியில் இருந்து வாங்கி வந்த மிளகு கொடியையும் ஏற்றியுள்ளார். மற்ற டிம்பர் மரங்கள் வளர்ந்த பிறகு அதிலும் மிளகு ஏற்றும் திட்டம் வைத்துள்ளார். மேலும், அருகிலேயே நாட்டு கோழிப் பண்ணைக்கான திட்டமும் வைத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ