அதிமுக.,வில் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக.,வுக்கு சட்டசபையில் மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்களும், 50 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தற்போது எம்எல்ஏ.,க்களில் ஓ. பன்னீர்செல்வம், பாண்டியராஜன், சண்முகநாதன், மாணிக்கம், மனோரஞ்சிதம், மனோகரன், ஆறுகுட்டி ஆகிய 7 பேர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சசிகலா அணியில் இருக்கிறார்கள்.


இந்த நிலையில் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் அடுத்தடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.


மொத்தம் உள்ள 50 எம்.பி.க்களில் தொடக்கத்தில் முதன் முதலாக மைத்ரேயன் எம்.பி. ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார். இதையடுத்து நேற்று காலை நாமக்கல் எம்.பி சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார் வந்தனர். நேற்றிரவு பெண் எம்.பி.க்கள் வனரோஜா, சத்யபாமா இருவரும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை மேலும் 3 எம்.பி.க்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்றுள்ளனர்.


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி எம்.பி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, வேலூர் எம்.பி செங்குட்டுவன், பெரம்பலூர் எம்.பி. மருதராஜ் ஆகிய 3 பேரும் இன்று காலை ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனால் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு வந்துள்ள எம்.பி.,க்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.


இதற்கிடையே இன்று காலை நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் மற்றும் தேமுதிக.,வில் இருந்து விலகி அதிமுக.,வில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழழகன், சுந்தர்ராஜன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சேலம் ரவிச்சந்திரன் ஆகியோரும் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகாவும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


இவர்களைத் தொடர்ந்து மேலும் சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் அணி மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.