பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனைக்கு தடை இல்லை -உச்சநீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது!
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது!
கடந்த 1998-ம் ஆண்டு நிகழ்ந்த பாகலூர், ஜி.மங்கலம் கள்ளச்சாராய எதிர்ப்பு போராட்டதின் போது, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு தற்போது 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி பாலகிருஷ்ண ரெட்டி மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341(சட்டவிரோதமாக தடுத்தல்), தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147-ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 341-ன் கீழ் ஒரு மாதம் சிறை தண்டனையும், தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி., சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது என பாலகிருஷ்ண ரெட்டியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் பாலகிருஷ்ண ரெட்டி. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் எனவும், அடுத்த 4 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.