கர்நாடகாவிற்கு சுப்ரீம்கோர்ட்- மறு உத்தரவு வரும்வரை தமிழகத்திற்கு 2000 கன அடி தண்ணீர் !!
டெல்லி: தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவை குறித்த உண்மை நிலவரத்தை கண்டறிய நிபுணர்கள் குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழுவின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஷா நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தலைமையில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் மசூத் உசேன், கிருஷ்ணா மற்றும் கோதாவரி படுகை அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆர்.கே.குப்தா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைப் பொறியாளர்கள், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, நிபுணர் குழுவின் அறிக்கை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு இயற்கை நியதிக்கு எதிராக இருந்தால் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய் வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. நடுவர் மன்றத்தில் அங்கம் வகித்த நீதிபதிகள் தவறான தீர்ப்பை வழங்கி இருந்தால் அதனை விசாரித்து மாற்றி அமைக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது என்று கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன் கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு விசாரணையை கையிலெடுக்கவும் சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகத்திற்கு, கர்நாடகா வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறு உத்தரவு வரும்வரை 2000 கன அடி தண்ணீர் திறப்பை உறுதி செய்ய கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆட்சேபனை மனுவை வரும் 25-ம் தேதிக்குள் தமிழகம் தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளது. இம்மாதம் 7-ம் தேதி முதல், 18-ம் தேதி வரை வினாடிக்கு 2௦௦௦ கன அடி தண்ணீரை கர்நாடகா, தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த அளவுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டிருந்த நிலையில், சுப்ரீம்கோர்ட் தண்ணீர் திறப்பை தொடர உத்தரவிட்டுள்ளது.