சுவாதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பு சென்னை புழல் சிறையில் நேற்று நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடையாள அணிவகுப்பை முடித்துவிட்டு சிறையில் இருந்து நீதிபதி சங்கர் பகல் 12.45 மணி அளவில் வெளியே வந்தார். அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, ‘‘இந்த அடையாள அணிவகுப்பு, முறைப்படி நடத்துவதுதான். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல வழக்குகளில் இதுதொடர்பாக வழிகாட்டுதல்கள் அளித்துள்ளன. அதன்படி அடையாள அணிவகுப்பு  நடத்தப்பட்டது. அடையாள அணிவகுப்புக்கு ராம்குமார் முழு ஒத்துழைப்பு அளித்தார். சிறையில் அவர் நலமாக இருக்கிறார். அடை யாள அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களின் விவரம் மற்றும் விசாரணை விவரங்களை வெளியிட முடியாது. விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்றார்


புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் மார்க்ஸ் ரவீந்திரன், மனோகரன், மரிய ஜான்சன் உட்பட 8 பேர் நேற்று மாலை சந்தித்துப் பேசினர். அவர்களின் சந்திப்பை போலீஸார் கண்காணித்தனர்.


இந்த சந்திப்பு குறித்து வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் கூறியதாவது:-


புழல் சிறைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு சென்றோம். போலீஸார் ராம்குமாரை மாலை 5 மணிக்கு அழைத்து வந்தனர். மாலை 5.30 மணி வரை ராம்குமாருடன் பேசினோம். அப்போது, அவர் எனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சுவாதியுடன் நான் பழகவில்லை. சுவாதி யார் என்றே எனக்கு தெரியாது" என ராம்குமார் தெரிவித்தார். மேலும்,‘வீட்டின் இருட்டு அறையில் இருந்தபோது என்னை சிலர் பிடித்தனர். என்னுடைய கழுத்தை அறுத்தனர். கழுத்தை அறுத்த நபரின் முகத்தை பார்க்க முடியவில்லை. அம்மா, அப்பாவை பார்க்க வேண்டும். பேசமுடியாத நிலையில் இருந்தபோது, என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கிவிட்டனர். கையெழுத்தும் வாங்கினார்கள்’என்றும் ராம்குமார் தெரிவித்தார்.


ராம்குமார் இன்னும் சோர்வாகத்தான் காணப்படுகிறார். அவரால் சரியாக பேசக்கூட முடியவில்லை. அவரது கழுத்துப் பகுதியில் போடப்பட்ட 18 தையல்கள் பிரிக்கப்படவில்லை. ராம்குமார் நிரபராதி. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் நிறைய உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.