ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள தியாகராஜர் அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு விடியல் என்ற தலைப்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றித்த கருத்துடன் பங்கேற்று உரையாற்றினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக இந்த மாநாட்டில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர்  தியாகு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


இந்த மாநாட்டில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்புக் குற்றங்கள் செய்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோரை விசாரிக்க அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்,  ஈழ விவகாரத்தில் அரசியல் தீர்வு காணும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட  16 தீர்மானங்களும் ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து,  ஈழத் தமிழர் படுகொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய தலைவர்கள் உரையாற்றினர். 


மேலும் படிக்க | ”வேண்டும் வேண்டும் ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை வேண்டும்”


அப்போது பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தேர்தல் அரசியல் வேறு ஈழ தமிழர் நலனுக்காக ஒன்றிணைந்து நிர்ப்பது வேறு என குறிப்பிட்டார். மேலும், வாக்குக்காக ஈழ தமிழர் விவகாரத்தை  பேசவில்லை எனவும், தேசிய கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒரேமாதிரியான செயல்பாட்டைதான் வெளிப்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய திருமாவளவன் இந்திய அரசு சிங்களர்களுக்கு ஆதரவானவர்கள் எனவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி,  ஈழ விவகாரத்தில் பாஜகவை எவ்வளவு எதிர்த்தாலும் அதே ஈழ தமிழர்களுக்கு உதவ அவர்களை சந்திக்க வேண்டியது வந்தால் சந்திப்பது தான் சாமர்த்தியம் எனவும் குறிப்பிட்டார். ஈழத்தமிழர் விவகாரத்தில் நாம் பேசுவதை விட நமது இந்திய அரசை பேச வைக்க வேண்டும் எனவும் அதற்கான ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் அப்போது குறிப்பிட்டார். 


அவரை தொடர்ந்து பேசிய, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன், உலகமெங்கும் உள்ள தமிழர்களும் நாமும் ஒன்றிணைந்தால் தனி ஈழம் சாத்தியம் என தெரிவித்தார். மேலும், தமிழர்கள் கதற கதற படுகொலைக்கு ஆளானபோது யாரும் கேட்கவில்லை என குறிப்பிட்ட அவர், உலகில் எங்கு தமிழர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தாய் தமிழர்களாகிய நமக்கு உள்ளதாக அறிவுறுத்தினார்.


தொடர்ந்து பேசிய பழ. நெடுமாறன் இலங்கை போரின்போது அனைவரும் ஒன்றுபட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என வருத்தம் தெரிவித்தார். ஈழம்,பெரியார் அணை,காவேரி பிரச்சனைகள் தனி பிரச்சினை அல்ல அது ஒட்டுமொத்த மக்கள் பிரச்சினை எனக்கூறிய அவர், ஈழ விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அறிவுறுத்தினார். 


மேலும் படிக்க | திமுகவுக்கு ஆஸ்கார் விருது : ஜெயகுமார் அறிவிப்பு..!


இது குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு இப்போது உதவும் இந்திய அரசு, தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஏன் வேடிக்கை பார்த்தது என கேள்வி எழுப்பினார். இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஒருபோதும் இருக்காது என தெரிவித்த அவர், ஈழ தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் ஒற்றுமை வேண்டுமென்றும், பொதுவாக்கெடுப்பையும் இனபடுகொலைக்கான நீதி விசாரணையையும் முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். 


மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், ஈழம் தொடர்பாக போராட முடியாது, பேச முடியாது, ஒரு புத்தகம் கூட வெளியிட முடியாது, ஒரு நினைவேந்தல் கூட நடத்த முடியாது எனும் சூழல் தான் இங்கு இருக்கிறது என வேதனை தெரிவித்தார்.ஈழ விவகாரம் தொடர்பான கோரிக்கைகளை இந்திய அளவில் எடுத்துச்செல்ல வேண்டுமென தெரிவித்த அவர், இலங்கை தமிழர்கள் என்ற சொல்லாடல் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அதற்கு மாற்றாக ஈழத் தமிழர்கள், தமிழீழ தமிழர்கள் என்ற சொல்லாடல் மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். அது மட்டும் இன்றி, தமிழக திமுக அரசாங்கள் ஈழ மக்கள் படுகொலை விவாகரத்தில் ஆதரவாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட திருமுருகன் காந்தி, முள்ளிவாய்க்கல் முற்றம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 


மேலும் படிக்க | ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி; மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்: இம்ரான் கான்


திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் பேசுகையில், இலங்கை சுதந்திரம் வாங்கியதில் இருந்து தமிழனை கொல்லவே பணம் செலவு செய்து வந்ததாக குற்றம் சாட்டினார். அதன் விளைவுதான், இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணமென விமர்சித்த அவர், இந்தோ சீனா போரின் போது சிங்களர்கள் சீனாவுக்கு ஆதரவாக இருந்தார்கள் எனவும், ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு ஆதரவாக இருந்ததார்கள் எனவும் தெளிவுபடுத்தினார்.


மேலும், இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழலை இந்தியா பயன்படுத்தி தனி ஈழம் அமைய முன்னெடுப்புகளை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன், இந்துத்துவா என்று  சொல்லும் பாஜக அரசு இலங்கையில் சிவலிங்கம் தொடங்கி இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதை ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் நீதி கிடைக்க திமுக அரசாங்கள் தனது முழு பங்கீட்டையும் வழங்கும் என உறுதியளித்தார். 


அவரை தொடர்ந்து பேசிய, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். தமிழக அரசியல் கட்சிகள் எப்படி தனி ஈழம் வேண்டுமென்று ஒரே கோட்டில் நிற்கிறதோ, அதே போல் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க வும் தனி ஈழம் அமைந்துவிடக்கூடாது என்பதில் ஒற்றுமையாக இருக்கிறது என பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.


மேலும், 2009 ஆண்டு நடைபெற்ற போரின்போது திமுக குறித்த ஒரு தவறான பார்வை உருவாகி உள்ளதாகவும், அதனை மீட்டெடுக்கும் வகையில்  ஈழ விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.


மேலும் படிக்க | இந்தியாவின் நம்பர் ஒன் செய்தி ஊடகமான ஜீ மீடியாவின் மற்றுமொரு சேனல் அறிமுகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR