தமிழகம், புதுச்சேரி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10.70 லட்சத்து மேலாக மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார்கள். 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 15-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந்தேதி வரை நடந்தது.
தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு மேல் அரசு தேர்வுதுறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டார். அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், இது தவிர பள்ளிகள் மற்றும் நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in போன்ற இணைய தளங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 1 முதல் மாணவர்களே சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு மாணவனும், மாணவியும் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் சிவகுமார் மற்றும் நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த பிரேமசுதா ஆகிய இருவரும் 499 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
மாநில அளவில் 50 மாணவ-மாணவிகள் இரண்டாம் இடத்தையும், 224 மாணவ- மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் மாணவர்கள் 91.3 %, மாணவிகள் 95.9 % வெற்றி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே தேர்ச்சியில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
10-ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 93.6 %, மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 10-ம் வகுப்பு 17,752 மாணவ, மாணவிகள் எழுதினர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.42 சதவீதமாகும்.
4 மாணவிகள் 498 மதிப்பெண்களுடன் பெற்று புதுச்சேரியில் முதலிடம் பிடித்தனர்.
18 மாணவ, மாணவிகள் 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன.
13 மாணவ, மாணவிகள் 496 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.