தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. அப்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. கஜா புயல் மறுசீரமைப்பு பணிகளுக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை எனக்கூறி, கவர்னர் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.


இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்;
தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறது. கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி கோரியது. ஆனால், மத்திய அரசு ரூ.1500 கோடி ரூபாய் அளவிற்கு கூட கஜா நிவாரணத்திற்கு வழங்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது. மேகதாது ஆய்வறிக்கைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வைக்க முடியவில்லை என கூறினார். 


மேலும், அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தத்தை ஏற்றியுள்ளார்கள். விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு - பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாணைக்கு ஆளாகியுள்ளார். 


ஆனாலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.