TN Budget: சிலிண்டருக்கு மானியம்... பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா? - இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பு!
TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார்.
TN Budget 2023: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2021ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. அதன், இரண்டு நிதிநிலை அறிக்கையை தற்போதைய திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. இதை தொடர்ந்து, மூன்றாவது முறையாக திமுக அரசு நாளை சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. காலை 10 மணியளவில், சட்டப்பேரவை நிரல்கள் தொடங்கும்.
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இந்தாண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார். மேலும், காகிதமில்லாத வகையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறும். மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பாகும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் அப்பாவு நாளை மாலை அறிவிப்பார்.
பலத்த எதிர்பார்ப்பு
கடந்த மாதம் பிப். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, பல்வேறு மாநிலங்கள் அடுத்தடுத்து தங்களின் பட்ஜெட்டை அறிவித்தன. அந்த வகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் மீதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது எனலாம்.
குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் அறிவிப்பு, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் நாளைய பட்ஜெட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையை போன்ற மதுரையிலும் மெட்ரோ அமைப்பதற்கான திட்டத்திற்கும் நாளை நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் கேள்வி
இருப்பினும், இவை அனைத்தையும் விட அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவிப்பு என்றால், மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில், மேலும் 100 ரூபாய் மாநில அரசு சார்பில் அளிக்கப்படும் என்பதுதான். இதனை, திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்த அறிவிப்பு வரும் என நீண்ட நாள்களாக எதிர்பார்ப்பில் இருந்தது.
சமீபத்தில் நடந்த முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும், மகளிருக்கான ரூ. 1000 ஊக்கத்தொகை, சிலிருண்டருக்கான மானியம் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. இதை தொடர்ந்து, இடைத்தேர்தல் பரப்புரைக்கு வந்த ஸ்டாலின், இவை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என உறுதியளித்தார். எனவே, தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் வந்துவிட்டதால், சிலிண்டருக்கான மானியம் குறித்த அறிவிப்பு கண்டிப்பாக வெளியாகும் என கூறப்படுகிறது.
மானியம்
சமையல் எரிவாயு சிலிண்டரை முழுத்தொகை கொடுத்து வாங்கிய பின்னர், அதன் மானியத்தொகையை மத்திய அரசு நேரடியாக மக்களின் வங்கிக்கணக்கிலேயே செலுத்திவிடும். முன்பு, மானிய விலையை கழித்துவிட்டுதான், மக்கள் சிலிண்டரை வாங்கி வந்தார்கள். இதையடுத்துதான், வங்கி கணக்கிற்கு மானியம் செலுத்தும் முறையை கொண்டுவந்தனர். பின்னர், மானியத் தொகை குறைக்கப்பட்டு, உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ஒரு சிலிண்டருக்கு தலா ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வருகிறது, மற்றவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. தற்போது மானியத்தை சில மாநில அரசுகளே வழங்கி வருகின்றன. ராஜஸ்தான் அரசு சிலிண்டருக்கு ரூ. 500 (ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்) மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மானியம் வழங்கப்படாத நிலையிலும், சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. இந்த மார்ச் 1ஆம் தேதி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 50 அதிகரிக்கப்பட்டதை அடுத்து, ஒரு சிலிண்டர் ரூ.1,118.50 (சென்னை) என விற்கப்படுகிறது. இதனால்தான், தமிழ்நாடு அரசின் சிலிண்டர் மீதான மானிய அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ