தமிழக பட்ஜெட் 2023: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் பிடிஆர் முன் இருக்கும் சவால்கள்..!

தமிழக பட்ஜெட் மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த உதவித் தொகையை சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு கொடுப்பதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பெரும் சவால்கள் காத்திருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 20, 2023, 12:11 PM IST
தமிழக பட்ஜெட் 2023: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் பிடிஆர் முன் இருக்கும் சவால்கள்..!  title=

திமுக அரசின் வாக்குறுதி

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டம் குறித்து பேசும்போது, தமிழக நிதிநிலைமை சரியான பின்னரே மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவித்தார். இது கடும் விமர்சனக்குள்ளானது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மகளிர் உரிமைத் தொகை கொடுக்காததை பிரச்சாரத்தில் முன்வைத்து திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். 

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இது குறித்து அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிப்பு வெளியாகும் என அறிவித்தார். மாநிலத்தின் கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்த திட்டத்தை கொண்டு வர இருக்கிறது திமுக அரசு. ஒருவேளை இந்த திட்டம் நாளைய பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகவில்லை என்றால், அடுத்தாண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை இதை வைத்தே அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தொடங்கும் முனைப்பில் இருக்கின்றன. ஆனால், அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது திமுக.

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2023: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அறிவிப்பு: பிடிஆர் சொன்ன கண்டிஷன்

பிடிஆர் எதிர்கொள்ளப்போகும் சவால்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதியமைச்சராக பொறுப்பேற்றது முதல் அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி ஆகியவற்றை அறிவித்தபோது அதனை உடனடியாக நடைமுறைப்படுத்திவிடவில்லை பிடிஆர். அனைத்து பயனாளிகளை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியே சரியான பயனாளிகளை ஏறக்குறைய தேர்ந்தெடுத்தார். அதாவது, விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி என இதில் ஏதேனும் ஒன்று மட்டுமே பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் கறாராக இருந்தார்.

அதில் ஏறக்குறைய அவர் வெற்றியும் பெற்றார் என சொல்லலாம். 100 விழுக்காடு பயனாளிகளை அடையாளம் கண்டுவிட்டாரா? என்றால் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இது அடுத்தடுத்த திட்டங்களிலும் தொடரக்கூடாது என்பதில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். துறைரீதியாக அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயனாகளை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க அவர் அறிவுறுத்தியிருப்பதுடன், அதற்கான வழிமுறைகளையும் கொடுத்து வருகிறார். அதனடிப்படையிலேயே அனைத்து பயனாளிகளும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலும் மிகவும் வறுமை மற்றும் ஏழ்மையில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செல்ல வேண்டும் என்பதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் எண்ணமாக இருக்கிறது. இதனால் அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தில் பயன்பெறும் ஓய்வூதியதாரர்கள், வரி செலுத்துபவர்கள், அரசு பணியாளர்கள், பொருளாதாரத்தில் மேன்மையாக இருப்பவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சரியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் சரியான பயனாளிகளை அடையாளம் காண்பதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருக்கின்றன. இது தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கும் என்பதால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? என்பதை காண பொறுத்திருக்க வேண்டும். 

மேலும் படிக்க | ADMK: ஆண்மகனாக இருந்தால் இதை செய் எடப்பாடி - சவால் விட்ட வைத்தியலிங்கம்

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2023: பிடிஆர் போட்ட பிளான் - ஸ்டாலின் மகிழ்ச்சி: வெளியாகப்போகும் அறிவிப்புகள்

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2023: அதிமுக ஆட்சியில் மாநில வரி வருவாய் கடும் சரிவு - டேட்டா வெளியிட்ட பிடிஆர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News