பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


“குற்றவாளி” வழிகாட்டுதலில் செயல்படும் பினாமி அரசின் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையில் அழிக்க முடியாத கரும்புள்ளியை வைத்து விட்டார்.


2017-18-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை ஜெயலலிதாவின் சமாதியில் முதலில் வைத்து, பிறகு அதை அங்கிருந்து எடுத்து வந்து சட்டசபையில் தாக்கல் செய்து பட்ஜெட் அறிக்கையின் புனிதத்தையும், சட்டமன்ற, அரசியல் சட்ட மாண்புகளையும் அடியோடு குழி தோண்டி புதைத்து விட்டார்.


இந்த அரசியல் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நிதியமைச்சருக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


“வருடாந்திர பட்ஜெட் ஒவ்வொரு நிதியாண்டிலும் கவர்னர் குறிப்பிடும் நாளன்று சட்டசபையில் அளிக்கப்பெற வேண்டும்” என்று தமிழ்நாடு சட்டசபை விதி 181 (1) தெளிவாக விளக்கியிருக்கிறது. “சட்டசபை” என்பது தமிழ்நாடு சட்டமன்ற சபைதான். சமாதிகளை சட்டசபையாக கருத முடியாது. தமிழ்நாடு சட்டசபை விதிகள் அரசியல் சட்டப்பிரிவு 208 (1) ன் கீழ் நிறைவேற்றப்பட்டது என்பதால், அந்த விதிகள் அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றவை.


இப்படியொரு சூழலில் “அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் நடந்து கொள்வேன்” என்று கவர்னர் முன்பு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ள நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபை விதிகளையும், அரசியல் சட்டத்தையும் மீறி சட்டசபை நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்திருப்பது கவலையளிக்கிறது.


பட்ஜெட்டை முதலில் சமாதியில் வைத்து விட்டு பிறகு சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது தமிழக சட்ட சபையை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல- சட்டசபை ஜனநாயகத்தையே முற்றிலும் கேலிக்கூத்தாக்கும் செயலாகும். சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் வரை பட்ஜெட் பற்றிய ரகசியம் காக்கப்படவேண்டும் என்பது மரபு.


ஆனால் அந்த மரபுகளையும் மீறி, பட்ஜெட்டை சமாதி வரை எடுத்துச்சென்ற நிதியமைச்சர் ஜெயக்குமார், தான் எடுத்துக்கொண்ட “பதவிப்பிரமாணம்” மட்டுமல்ல- அமைச்சராகும் போது எடுத்த “ரகசிய காப்பு பிரமாணத்தையும்” மீறிவிட்டார்.


சட்டசபை மாண்புகளை சீர்குலைத்து அரசியல் சட்டத்தை மீறிய நிதியமைச்சர் ஜெயக்குமார் மீது தமிழக பொறுப்பு கவர்னர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது அறிகையில் கூறியுள்ளார்.