மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறந்து வைத்தார் தமிழக முதல்வர் பழனிசாமி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்ததால், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ள நீரோடு காவிரி பொங்கிப் பாய்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், சுற்றுலாப் பயணிகள் அருகே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டத்தில் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேட்டூர் அணைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று அதிகாலை 4 மணியளவில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரி நீரை வரவேற்று வழிபட்டனர். கர்நாடகா அணைகளில் திறந்துவிடப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணை ஒரே நாளில் 18..6 அடி உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 2.30 லட்சம் கன அடியாக உள்ளது. மொத்தம் 93.4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது. 66.43 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. நீர்மட்டம் 101.22 அடியை எட்டியுள்ளது. 


இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீரை திறந்து வைத்தார். வேளாண் மக்களின் நலன் கருதியும் மேட்டூர் அணையைத் திறக்க உத்தரவிட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அணைத் திறப்பின் மூலம் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்படும் என்றும், கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் வாயிலாக நீர் மேலாண்மை செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளை கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.