பிரதமருக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள் கடிதம்
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்ககூடாது என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சேலம் உருக்காலையும் ஒன்று. சேலத்தில் இரும்புத்தாது அதிகம் உள்ள கஞ்சமலையில் இரும்பு வெட்டி எடுத்து பயன்படுத்தலாம் என்று 1970-ம் ஆண்டில் முதல்வராக இருந்த கருணாநிதி இரும்பாலை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தினார். இதற்கான திட்டம் 1970-ம் ஆண்டு வகுக்கப்பட்டது. 1981-ம் ஆண்டு சேலம்-தாரமங்கலம் மெயின்ரோட்டில் சுமார் 4,500 ஏக்கரில் இரும்பாலை உருவாக்கப்பட்டு, குளிர் உருட்டாலை தொடங்கப்பட்டது.
மத்திய அரசுக்கு சிறந்த லாபத்தை அளிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக சேலம் உருக்காலை விளங்கியது. 2003-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை, வருடத்துக்கு சராசரியாக 100 கோடி ரூபாய் லாபம் பெற்றுத் தந்தது. ஆனால் 2010-ம் ஆண்டு 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எஃகு உற்பத்தி கூடம் அமைத்ததால், உருக்காலையின் கடன் சுமை அதிகமானது. கடந்த சில ஆண்டுகளாக உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரமருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், உருக்காலையை தனியார் மயமாக்கினால் ஏற்படும் சிக்கல்களை குறிப்பிட்டுள்ளார். மேலும், “சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கினால், அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றம் உருவாகும். சேலம் உருக்காலையால் 2000 பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். எனவே, சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் திட்டம் இருந்தால் அதனை கைவிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.