கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு விடுத்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் வேண்டுகோள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது, அவர் ‘மத்திய அரசின் உத்தரவுப்படி 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும். 21 நாள்கள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. உங்களையும் உங்களது குடும்பத்தையும் காக்கும் அரசின் உத்தரவு" என அவர் தெரிவித்தார். 


இதை தொடர்ந்து அவர் கூறுகையில்... நான் தமிழக முதல்வராக அல்ல, உங்களில் ஒருவராக, உங்கள் குடும்பத்தில் ஒருவராக வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழக மக்கள் அனைவரும் கொரோனாக்கு எதிரான இந்த போராட்டத்திர்க்கு ஒத்துழைக்க வேண்டும். அரிசி, பால், இறைச்சி மற்றும் மருந்துப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். 


சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதியோர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழையும் முன்பு, நம் பாரம்பரிய வழக்கப்படி கை, கால், முகத்தை சோப்பு போட்டு கழுவுங்கள். இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொள்ளுங்கள். அரசால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை தவறாது கடைபிடிக்கவும். அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை மீறுவோர் மீதும், வீண் வதந்திகளை பரப்புவோர் மீதும், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுப்பர். 


அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் வெளியில் வரும்போது ஒருவருக்கொருவர் கட்டாயம் 3 அடி இடைவெளி விட்டு, சமூக இடைவெளியை கடைபிடிப்போம். பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும், சமுதாயத்தையும் காப்போம். கடுமையான சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரையோ அல்லது அரசு மருத்துவமனையையோ அணுகவும். மருத்துவர் ஆலோசனையின்றி சுயமருத்துவம் செய்யாதீர்கள். தேவைப்பட்டால் அரசு உதவி மைய எண்கள் 104 (அ) 1077-ஐ தொடர்பு கொள்ளவும்.


வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ, உறவினர்களோ உள்ளாட்சி அமைப்புக்கோ, சுகாதார துறைக்கோ, காவல் துறைக்கோ தகவல் தெரிவிக்கவும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். இதனை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அரசு மட்டும் நடவடிக்கை எடுத்ததால் போதாது; உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். கொரோனோ வைரஸ் நோயின் தீவிரத்தை உணர்ந்து நீங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.


21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல.... உங்களது குடும்பத்தை பாதுகாக விடுக்கபட்ட அரசின் உத்தரவு. மக்கள் தங்களது வீட்டில் சுய மருத்துவம் செய்துக்கொள்ள வேண்டாம். பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 21 நாள்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்போம். சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து கொரோனாவை விரட்ட நாம் உறுதியேற்போம். கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பதற்கு உறுதியேற்போம். நாம் பொறுப்பான குடிமக்களாக செயல்பட்டு நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாப்போம் என்று கூறினார்.


 நாம் அனைவரும் உடலால் தனித்திருப்போம்... உள்ளத்தால் இணைந்திருப்போம். கொரோனாவைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவைத் தடுக்க ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம். கொரோனா பரவுவதைத் தடுப்பது எப்படி என்பதை நாம் அனைவரும் அறிந்து செயல்படவேண்டும்’ என்று அவர் உரையாற்றினார்.