’மிஸ்டர் RN ரவி பயமுறுத்த நினைக்காதீங்க.. உங்க வேலை இங்கு நடக்காது’ - முதலமைச்சர் முக.ஸ்டாலின்
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி யாருடைய கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், பயமுறுத்த நினைப்பதெல்லாம் இங்கு எடுபடாது என காரசாரமாக பேசியுள்ளார்.
முதலமைச்சர் உரை
சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக ஆளுநருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய அவர், ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டுமே இருக்கிறது. திராவிடம் காலாவதியாகவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " சில நாட்களுக்கு முன்னால் ஆளுநர் ஆர்.என்.ரவி 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேட்டுக்கு ஒரு பேட்டியை அளித்துள்ளார். அதில் திமுக அரசு மீது பல்வேறு அவதூறான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டு தந்து விட மாட்டேன்.
மேலும் படிக்க | இதுதான் திமுக அரசின் மாஸ்டர் பிளான் - விளக்கம் கொடுத்த மனுஷ்ய புத்திரன்!
ஆளுநர் வெளிநடப்பு
கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உரையாற்ற வந்த ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய உரையை வாசிக்காமல் அதனை திருத்தி வாசித்தார். அப்படி அவர் நடந்து கொண்டது அவையின் உரிமையை மீறிய செயல் என்பதால், அரசு தயாரித்து அனுப்பிய உரையே அவைக் குறிப்பில் இடம் பெறும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். அவையின் மாண்பைக் காப்பதற்கு இதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. நாட்டுப் பண்ணுக்குக் கூட இருக்காமல் வெளிநடப்பு செய்தார் ஆளுநர்.
சரமாரி கேள்வி
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லை என்று ஆளுநர் அவர்கள் சொல்லி இருக்கிறார். பாஜக ஆளுகிற மணிப்பூர் மாநிலம் இதோ பற்றி எரிகிறதே - அது போல தமிழ்நாடு பற்றி எரிகிறதா? என்ன பேசுகிறார் ஆளுநர்? சில நாட்களுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் கலவரம் நடந்ததே? அது பாஜக ஆளும் மாநிலம் அல்லவா? அதுபோல இங்கு நடந்ததா?. சர்வதேச போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு தமிழ்நாட்டிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆளுநர் சொல்கிறார். திமுக ஆட்சி அமைந்த பிறகு அப்படி எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை.
ஆளுநரின் பச்சைப்பொய்
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அப்படி ஒரு தகவல் வந்துள்ளது. அதற்கும் திமுக ஆட்சிக்கும் தொடர்பு இல்லை. எதற்காக பழைய சம்பவங்களைச் சொல்லி திமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகிறார் ஆளுநர். தர்மபுரம் ஆதினத்துக்கு தான் போன போது தனது வாகனம் வழிமறித்து தாக்கப்பட்டதாக ஆளுநர் அபாண்டமாக பொய் சொல்கிறார். கருப்புக் கொடி காட்டியவர்கள் திமுகவினர் அல்ல.
சட்டம் அனைவருக்கும் சமம்
சிதம்பரத்தில் நடந்த குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்கை முன் வைத்து ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அவருக்கு அப்போதே பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் வழக்கு பதியப்பட்டது. இதில் இவருக்கு என்ன வந்தது?. குழந்தைத் திருமணத்தை தடுப்பதில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. யார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிறாரா? அந்தக் காலத்தில் 7 வயதில், 8 வயதில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்களே அத்தகைய சனாதன காலத்தை உருவாக்க நினைக்கிறாரா?
யாருடைய கைப்பாவை?
13 வயது சிறுமிக்கும் - 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது தவறு. அதனால் தான் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார் ஆளுநர்?. குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறாரா? இதைக் கண்காணிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறாரா?. ஏற்கனவே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கையெடுத்துப் போடாமல் இழுத்தடித்தவர் இந்த ஆளுநர். யாரோ சிலரின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்ற சந்தேகம் தான் இதன் மூலமாக உறுதிப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ஆட்சி நடத்தப் பார்க்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
சனாதனத்திற்கு மாற்று திராவிடம்
'திராவிடம்' என்றால் காலாவதியான கொள்கை என்று சொல்லி இருக்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி. திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தை காலாவதி ஆக்கியது திராவிடம். வர்ணாசிரமத்தை காலாவதி ஆக்கியது திராவிடம். அதனால் தான் ஆளுநர் அதனைப் பார்த்து பயப்படுகிறார். யாரும் இதனைப் பார்த்து பயப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மீஞ்சூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளிக்கு சீல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ