அரசியல் ரீதியாக நரேந்திர மோடி அரசு மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை ஏற்க முடியாமல் பா.ஜ.க.வினர் அவதூறு சேற்றை அள்ளி வீசி வருகிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
 
தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தூத்துக்குடியில் உரையாற்றும் போது நாடாளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசியிருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு குறித்து கனவு காண்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதேநேரத்தில் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற கருத்துக்களை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். 


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடுகிற சிலர் ஊழல்வாதிகள் என்று கூறியிருக்கிறார். இவரது வாதத்தின்படி யார் ஊழல்வாதிகள்? ஆனால் 2ஜி வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு நீதிமன்றம் எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ஆ. ராசா போன்றவர்களை நிரபராதிகள் என அறிவித்து தீர்ப்பு வழங்கினார். 


அதேபோல, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. கார்த்தி சிதம்பரத்தை பற்றியும் அமித்ஷா அவதூறான கருத்தை கூறியிருக்கிறார். இவரை கைது செய்ய மத்திய அரசு துடித்தது. ஆனால், அவரை கைது செய்வதாக இருந்தால் ஆதாரங்களை வழங்குங்கள் என்று நீதிபதி பலமுறை கூறியும் மத்திய அரசின் வழக்கறிஞரால் ஆதாரத்தை வழங்க முடியவில்லை. அதனால் தான் திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. 


அரசியல் ரீதியாக நரேந்திர மோடி அரசு மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை ஏற்க முடியாமல் பா.ஜ.க.வினர் அவதூறு சேற்றை அள்ளி வீசி வருகிறார்கள். 


மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவதற்கு அமித்ஷாவுக்கு என்ன தகுதியிருக்கிறது? உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்த போது குஜராத் கலவரத்தில் சம்மந்தப்பட்டதால் சிறப்பு புலனாய்வுக்குழு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில் குஜராத்திற்குள் நுழையக் கூடாது, மும்பையில் தங்கி நாள்தோறும் காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற அடிப்படையில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை தேசிய தலைவராக பெற்றுக் கொண்டதற்காக பா.ஜ.க.வினர் வெட்கப்பட வேண்டும். அதற்கு மாறாக அப்பழுக்கற்ற காங்கிரஸ் - தி.மு.க. கட்சியினர் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
பணமதிப்பு இழப்பு அமல்படுத்தப்பட்ட போது அமித்ஷா தலைமையில் குஜராத் மாநிலத்தில் இயங்கிய கூட்டுறவு வங்கிகளில் ரூபாய் 780 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இதன்மூலம் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டது. இத்தகைய ஊழலை செய்த அமித்ஷா காங்கிரஸ் கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறலாமா?
 
மேலும் கூட்டத்தில் பேசும் போது ‘பாகிஸ்தான் தாக்குதலுக்கு பழிவாங்க வேண்டுமா? வேண்டாமா? என்று கூட்டத்தைப் பார்த்து அமித்ஷா கேட்டுள்ளார். இந்தியாவை ஆளுகிற கட்சியின் தலைவராக இருக்கிற அமித்ஷா இப்படி தரம் தாழ்ந்து பேசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இவர் பாகிஸ்தானை பழிவாங்க வேண்டுமென்று நினைக்கிறாரா? மாறாக சிறுபான்மை மக்களை பழிவாங்க வேண்டுமென்பதற்காக பாகிஸ்தான் பெயரை குறிப்பிடுகிறாரா? 


மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சி தமிழகத்தில் எடுபடாது என்பதை அமித்ஷாக்கள் உணர வேண்டும். ஏனெனில் இது தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் தமிழக அரசியல் களம் பண்படுத்தப்பட்டதால் வகுப்புவாத சக்திகளால் எக்காலத்திலும் காலூன்ற முடியாது என்பதை உணர வேண்டும்.
 
எனவே, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர எந்த கட்சியும் முன்வராத நிலை இருந்தது. இந்நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி சாம, பேத, தான, தண்டங்களை கடைப்பிடித்து அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் கூட்டணியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி கூட்டணி அமைத்தவர்கள் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்த காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைப் பற்றி பேச பா.ஜ.க.வினருக்கு என்ன உரிமை இருக்கிறது? 


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.