ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு தமிழக டி.ஜி.பியின் அதிரடி உத்தரவு
ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு பணம் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
Chennai சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் கருவூலத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கும் அதன் கிளைகளும் பணமானது சாலை மார்க்கமாகவும், ரயில்கள் மூலமாகவும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பணத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் ரிசர்வ் வங்கி கருவூலத்திலிருந்து பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், மூத்த வங்கி அதிகாரிகள் ஆலோசனையின்படி பணம் வைத்திருக்கும் வங்கி கருவூலங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமீபத்தில் தேசிய வங்கிகளின் மூத்த அதிகாரிகளோடு நடந்த மாநில அளவிலான பாதுகாப்புக்குழு கூட்டத்தில், பணத்தைப் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பிற்கு போடப்படும் காவலர்களுக்கு போதுமான ஆயுதங்கள் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தேசிய வங்கிகளின் கருவூலங்கள் சென்னையிலும் மற்ற நகரத்திலும் இயங்கி வருவதால் அந்தக் கருவூலங்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா? எனவும் பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்கள் ஆயுதங்களை முறையாக வைத்துள்ளார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ALSO READ அரசுத் துறை பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் - கமல்ஹாசன்
மேலும், வங்கி கருவூலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்போது அதற்கான பாதுகாப்புச் செலவை வங்கிகள் நிலுவைத் தொகை செலுத்தாமல் வைத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் 94 லட்சம் ரூபாய் அளவிற்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடினால்தான் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சேலத்திலிருந்து சென்னை வரும் ரயில் மூலமாக பணம் எடுத்துச் செல்லப்பட்டபோது, ரயிலின் மேற்கூரையை துளையிடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததும், பின்னர் இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை பிடித்து, ஐந்தே முக்கால் கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR