தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை
19 உறுப்பினர்கள் இடம் பெற்ற மருத்துவ நிபுணர் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
சென்னை: சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இன்று 16 வது நாளாகும். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது.
அதன்பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதுக்குறித்து மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. பல அமைப்புக்களுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது.
அதேபோல மாநில அரசும், மருத்துவ அமைப்பு உட்பட பல நிர்வாகத் தலைமையுடன் ஆலோசனை நடத்தியது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் COVID-19 பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
தமிழக அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும் COVID-19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அனைத்து மருத்துவர்களும, ஊரடங்கு உத்தரவு இன்னும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டால் நல்லது என்று 19 உறுப்பினர்கள் இடம் பெற்ற கமிட்டியின் பரிந்துரைகளில் இதுவும் ஒன்று என்று தலமை செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் உள்ள ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் COVID-19 நோய்த் தொற்றுகளுக்கான சிகிச்சை நெறிமுறைக்காக இந்த மாத தொடக்கத்தில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
19 பேர் கொண்ட குழு, முதலமைச்சர், சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆகியோருடன் காலையில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இரண்டு மணி நேர சந்திப்பு நடத்தியது.