உயிரைவிட மேலானது ஒழுக்கம் ; அவ்வொழுக்கமே ஒரு மனிதனை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச்செல்லும் ; ஒழுக்கமில்லாத வாழ்வை வாழ்பவர் எவராகிலும் ; அவர் உயிரோடு இருந்தாலும்,  உயிரற்றவர் ஆவார் என்பது வள்ளுவர் பெருந்தகையின் வலுவான கூற்றாகும். அக்கூற்றின்படியே தன் வாழ்நாளை அமைத்துகொண்டார் ஓமந்தூரார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அன்றைய தென்னாற்காடு மாவட்டம் ஓமந்தூரில் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் ஒன்றாம் நாள் பிறந்த அவரது இயற்பெயர் ராமசாமி ஆகும்.  அவர் பின்னாளில்  முதலமைச்சர் ஆனவுடன் அவரது பெயரோடு அவரது பிறந்த ஊரும் ஒன்றிணைந்ததால் அன்றுமுதல் ஓமந்தூர் ராமசாமி என அவர் அழைக்கப்பட்டார். 


எட்டாம் வகுப்புவரை பயின்ற அவர் நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். காந்திய சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அவர், சிறு வயதிலேயே விடுதலை போராட்டத்தில் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகொண்டார்.


காங்கிரஸில் ஐக்கியம்


இந்நிலையில் நாடு முழுவதும் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தபோது, வேதாரண்யத்தில் நடைபெற்ற அப்போராட்டத்தில் கலந்துகொண்ட ராமசாமி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆக்ரோஷத்தோடு முழக்கமிட்டார்.  அவற்றை உன்னிப்பாகக்  கவனித்த ஆங்கிலேயே அரசு,  சிறுவன் என்றுகூட பாராமல் ஈவு இரக்கமின்றி அவரை சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்து சித்தரவதைக்கு உட்படுத்தியது. அதைப்பற்றியெல்லாம் துளியளவுக்கூட கவலைப்படாமல் வீரத்தீரத்துடன் சிறைவாசத்தை எதிர்கொண்டார். இதனையடுத்து இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை ஓர் அங்கமாக்கிக் கொண்டார்.


காலங்கள் கடந்த நிலையில், ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டம் நாடெங்கும் பேரெழுச்சியுடன் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், இரண்டாவது முறையாக தனது 47ஆவது வயதில், 1942ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற  'வெள்ளையனே வெளியேறு' இயக்க போராட்டத்திலும் தன்னை  இணைத்துக்கொண்ட அவர், அதற்காக ஆங்கில அரசால் மீண்டும் கைதுசெய்யப்பட்டு,  15 மாதங்கள் சிறைதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்தளவிற்கு விடுதலை வேட்கையானது ; அவரது அடி மனதில் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலமது!


செல்வாக்கு அதிகரிப்பு


இந்நிலையில், முதலமைச்சர் ஆவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு அவரைத்தேடி வந்தபோதிலும், அவருக்கு எதிராக அத்தேர்தலில் அதீத செல்வாக்கு பெற்ற தீரர் சத்தியமூர்த்தி களமிறங்கினார். அத்தேர்தல் களத்தில் அவரை படுதோல்வி அடையசெய்து, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார் ; ஓமந்தூரார்.
 
காங்கிரஸ் கட்சியிலும் அவரது செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியது. காலம் வேகமாக உருண்டோடிய நிலையில், சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பதவி அவரைத் தேடிவந்தது. ஆனால் அவரோ, 'அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது' என்றார். இருப்பினும்,  திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷியை சந்தித்து, "முதலமைச்சர் பதவியை கட்சியினர் ஏற்க சொல்லுகிறார்கள். என்ன செய்யலாம்" என்று ஆலோசித்தார்.. அதற்கு அவரோ, "நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பு கிடைப்பது அரிது. ஆகையால், அவற்றை மறுக்காமல் ஏற்றுக்கொள்" என்றார். ஆயினும், மூன்று மாதக்காலம் மௌனமே அவரது பதிலாக இருந்தது. 


முதலமைச்சரான பின்


இந்நிலையில், காமராஜர் மற்றும் ராஜாஜியின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை அவர்  ஏற்றுக்கொண்டார். 1947ஆம் ஆண்டு மார்ச் 23முதல் 1949 ஏப்ரல் 6வரை ஓமந்தூரார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார். இரண்டாண்டு காலம் அரியணையில் இருந்தபோதிலும் கட்சிகாரர்களுக்கோ ; நண்பர்களுக்கோ ; உறவினர்களுக்கோ ; அவர் எவ்வித சலுகையும் செய்து கொடுக்கவில்லை. 


அந்தளவிற்கு எளிமையின் சிகரமாகவும் ; நேர்மையின் இலக்கணமாகவும் அவர் திகழ்ந்தார். இதற்கிடையில் நாடு விடுதலை அடைந்தது. அதன் மூலம் விடுதலை இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் என்ற சிறப்பு ஓமந்தூராருக்கு கிட்டியது. மேலும் அவர் அரியணையில் அமர்திருந்த காலகட்டத்தில்தான் தமிழக இலச்சினை உருவாக்கப்பட்டது.
 
குறிப்பாக, அவர் முதலமைச்சர் பதவியேற்றதும்  தனக்கான அந்தரங்க செயலரை நியமிப்பதில்,  ஐசிஎஸ் படித்த ஆங்கில அதிகாரிகளை தவிர்த்துவிட்டு, ஏ. அழகிரிசாமி என்ற தமிழரை நியமித்தார். வழக்கறிஞரான அழகிரிசாமி பின்னாளில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். அடுத்து, பாராட்டு கூட்டங்களுக்கும்  வெற்று விழாக்களுக்கும் அரசியல் ஆரவாரங்களுக்கும் தடை போட்டார்.


விவசாயிகளுக்கு முக்கியத்துவம்


சென்னை மாகாணம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய தேசத்தோடு இணைத்தார். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை உடைத்தெறிய அரும்பாடுபட்டார். விவசாயிகள் மற்றும் ஏழை எளியவர்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தினார்.
 
மேலும் வாரத்தில் 5 நாட்கள் கோட்டையில் மக்கள் பணியையும் ; இரண்டு நாட்கள் சொந்த ஊருக்குச்சென்று விவசாயப் பணியையும் மேற்கொண்டார். வயலில் தானே நேரடியாக இறங்கி வேலை செய்தார். மண்வெட்டியும், ஏர் கலப்பையும் அவரது உற்ற தோழர்களாவர்.


வார இறுதி நாட்களில் ரயில் மூலம் சொந்த ஊருக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதிலும் தனது சொந்த பணத்தில் பயணச்சீட்டு வாங்கி பயணிப்பார். பெரும்பாலும் தனது மகனையும் தன்னோடு அழைத்துச்செல்வார். ஒருமுறை ஓமந்தூரார் தனது மகனோடு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது. நள்ளிரவு 12 மணியளவில் உதவியாளர் மூலம் பயணச்சீட்டு பரிசோதகரை அழைத்துவர சொன்னார். முதலமைச்சரிடமிருந்து அழைப்பு வந்ததால், என்னமோ ஏதோவென்று பரிசோதகரும் பதறியடித்துக் கொண்டு அவர்முன் வந்து நின்றார். 


மேலும் படிக்க | Budget 2023: ’நல்ல முன்னேற்றம்’ பட்ஜெட் தாக்கல் குறித்து பிடிஆர் சொன்ன முக்கிய தகவல்


நேர்மை


அப்போது அவரிடம், "எனது மகனுக்கு இன்று நள்ளிரவு முதல் 13 வயது ஆகிவிட்டது. ஆகையால், அவனுக்கு  முழு பயணச்சீட்டு (டிக்கெட்) தருமாறு கேட்டார்". அதற்கு பரிசோதகர், "பரவாயில்லை" என்றார். சட்டம் அனைவருக்கும் பொதுவானது ; அதில் எனக்கோ என் மகனுக்கோ விதிவிலக்கு ஏதும் கிடையாது. ஆகையால் பயணச்சீட்டை தாருங்கள் என ஓமந்தூரார் கறாராக கேட்டார். வேறுவழியின்றி பரிசோதகரும் பணத்தை பெற்றுக்கொண்டு பயணச்சீட்டை வழங்கினார். 


ஏனெனில், 5 வயதுவரை  ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம். 5 வயதுக்குமேல்  12 வயதுவரை அரை கட்டணமும்,13 வயதிலிருந்து முழுகட்டணம் வசூலிக்கப்படும். ரயிலில் கட்டணம் இல்லாமல் பயணிக்க மாட்டேன் என்கிற  ஓமந்தூராரின் நேர்மைக்கு இதைவிட ஓர் எடுத்துக்காட்டு தேவையில்லை எனலாம். அவரது ஒழுக்கத்தைக்கண்டு வியந்த தமிழ்நாட்டு மக்கள்  ஓமந்தூர் ராமசாமியை கௌரவப்படுத்தும் விதமாக ஓமந்தூரார் என அன்போடு அழைக்கத் தொடங்கினர்.


ஆதிதிராவிடர் நலன்


அந்நாளில், சென்னை மாகாணத்தில் இருந்த ஏழுமலையான் கோயிலில் ஆதி திராவிடர்கள் உளளே செல்வதற்கு இருந்த தடையை நீக்கும் பொருட்டு, ஆலயப் பிரவேச சட்டத்தைத் தனது பதவி காலத்தில் இயற்றினார். அதன் மூலம் பட்டியலின மக்கள் ஆலயத்துக்குள் நுழைவதற்கு வழிவகை செய்தார். 
 
அது மட்டுமின்றி, பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட திண்டிவனம் சட்டமன்ற  தொகுதியின் உறுப்பினரான குலசேகர் தாஸ் என்பவரை அவ்வாலயத்தின் அறங்காவலராக நியமித்தார்.  இதற்கு ஆதிக்க சாதியினரிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் படுபயங்கரமாகக் கிளம்பியது. அதற்கெல்லாம் ஓமந்தூரார் அசைந்து கொடுக்கவில்லை. ஆதி திராவிடர்களுக்கு என்று தனித்துறையை உருவாக்கினார். அதற்கு என்று ஓர் ஆணையரை நியமித்தார்.
 
அரசாங்க நிலத்தை பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதி திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற நடைமுறையை அரசாணையாக பிறப்பித்தார். அதன்மூலம் ஆதிதிராவிடர் நலத்துறையின் தந்தை என போற்றப்பட்டார்.


அரசியலுக்கு பின் ஆன்மீகம்


மேலும் மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்கும் பொருட்டு சட்டம் இயற்றினார். கொத்தடிமைகளை அதிகம் பயன்படுத்திவந்த ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார். ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கையை மேற்கொண்டார். அதில் வெற்றியும் கண்டார்.


உண்மை - உழைப்பு - நேர்மை இந்த மூன்றும் அவரது தாரக மந்திரமாகும். தன் வாழ்நாள் முழுவதும் அவற்றைத் தவறாமல் கடைபிடித்தார். அதன்படியே அவர் வாழ்ந்தும் காட்டினார். முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதும், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். இதனையடுத்து, தன் பெயரில் இருந்த சொத்துகள் அனைத்தையும் வடலூர் சன்மார்க்க சங்க மடத்துக்கு எழுதி வைத்துவிட்டார்.


உடல்நலம் குன்றியிருந்த காலத்தில், அவரது உடல்நலனை கவனிக்கும் பொருட்டு, அரசு மருத்துவமனையில்  சிகிச்சைப்  பெறுமாறு ஓமந்தூராரிடம் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் வைத்தார். ஆனால், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறமாட்டேன் என அவர் தீர்க்கமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் நாள் இவ்வுலகிலிருந்து விடைபெற்றார். 


ஓழுக்கச்சீலர் ஓமந்தூராருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட வீணடிக்க விரும்பாத ஒழுக்கச்சீலரான ஓமந்தூராருக்கு இன்று 128வது பிறந்தநாள். அவர் வாழ்ந்த  இம்மண்ணில் நாமும் வாழ்கிறோம் என எண்ணி பெருமிதம் கொள்வோம்.


மேலும் படிக்க | Budget 2023-24 Live Updates: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்... அரசியல் அழுத்தங்களை சமாளிப்பாரா நிர்மலா சீதாராமன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ