அதிமுகவின் கோரிக்கையை ஏற்பதாக தமிழக அரசு உறுதி!
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் போன்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்பதாக தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் எந்த ஒரு புகாருக்கும் இடம் தராமல் நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்படும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், மத்திய அரசு அதிகாரியை தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும், தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி அதிமுகவின் கோரிக்கையை பரிசீலித்து முடிவை அறிவிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதன்படி மாநில தேர்தல் ஆணையமும் கோரிக்கையை பரிசீலித்து முடிவை அதிமுகவுக்கு தெரிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயணன், மாவட்டத்தில் 20 சதவீத வாக்கு சாவடிகள் மட்டுமே கண்காணிப்பு கேமரா, இணையதள வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த வசதிகளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்கள் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் முறைகேடு குறித்து மக்கள் புகார் தெரிவிக்கும் விதமாக தேர்தல் பார்வையாளர்கள் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ரகசியமாக செயல்படக்கூடிய தேர்தல் பார்வையாளர்களை பொதுமக்களுக்கு அடையாளப்படுத்த முடியாது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகளிலும் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபடும். அதனால் உள்ளே கேமரா பொருத்த தேவையில்லை. முடிந்தளவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த உள்ளாட்சி தேர்தலில் எந்த ஒரு புகாருக்கும் இடம் தராமல் நியாயமான முறையில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்பதை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நடைமுறையின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ALSO READ முதலமைச்சருக்காக நீதிபதியை நிறுத்தி வைப்பதா? நீதிபதி காட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR