தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ் மாக விலக்கிக் கொள்வதாக அரசு மருத்துவர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 18,600 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.


மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். 
 
இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்முகமது யுனீஸ் ராஜா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அரசு மருத்துவர்கள் டிசம்பர் 8 முதல் 13 வரை சிறு அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை என அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலை நிறுத்தத்துக்குத் தடை விதிக்கக் கோரியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, வேலைநிறுத்தத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துத் தமிழக சுகாதாரத்துறைச் செயலர், அரசு மருத்துவர் சங்கச் செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது.


இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சுகாதாரத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவது குறித்து ஆராய நிதித்துறைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


இதையடுத்து, தமிழக அரசு அமைத்த குழு எவ்வளவு நாட்களில் அறிக்கை அளிக்கும்? அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலம் ஆகும்? என்பது குறித்து சுகாதாரத் துறைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அரசு மருத்துவர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாளை நடத்த இருந்த வேலைநிறுத்தத்தைத் தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாகத் தெரிவித்தார். வழக்கு விசாரணையை நீதிபதிகள் டிசம்பர் 17 ஆம் நாளுக்கு ஒத்தி வைத்தனர்.