தென்னை மரத்திலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி
தென்னை மரத்திலிருந்து ’நீரா’ பானத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தென்னை மரத்திலிருந்து ’நீரா’ பானத்தை இறக்கி, பதப்படுத்தி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று, தென்னை விவசாயிகள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்தனர். நேற்று, இதுகுறித்து தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ’நீரா’ பானத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
தமிழக அரசு வெளியிட்ட அறிகையில்:-
தமிழ்நாட்டில், சுமார் 8 கோடி தென்னை மரங்களில் இருந்து 10.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடிசெய்யப்படுகின்றன. அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கிறது.
’நீரா’ என்பது தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையிலிருந்து உற்பத்திசெய்யப்படும் ஒரு பானமாகும். நொதிக்காத வகையில் உற்பத்திசெய்யப்படும் இந்த பானம், ஆல்கஹால் இல்லாத, இயற்கையான ஊட்டச்சத்து பானமாகும்.
நீரா பானத்தில், வைட்டமின் ஏ, பி, சி அனைத்தும் ஒருங்கே கிடைக்கிறது. உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகிறது.
தென்னை வளர்ச்சி வாரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட நொதிப்பு எதிர்ப்புத் திரவத்தைப் பயன்படுத்துவதால், ’நீரா’ பானம் நொதிக்காமல் இயற்கைச் சுவை மாறாமல் நீண்டநாள் சேமித்துப் பயன்படுத்தலாம்.
ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் உற்பத்திமூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் 1,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். ’நீரா’ பான உற்பத்திசெய்வதன்மூலம், ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டு வருமானம் சுமார் ரூ.15 ஆயிரம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையினால், தமிழக மக்களுக்கு இயற்கையான ஊட்டச்சத்து மிக்க நீரா பானம் கிடைப்பதோடு, சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தென்னை விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும்.
மேலும், நீரா பானத்தைப் பயன்படுத்தி, நீரா சர்க்கரை, நீரா வெல்லம், நீரா தேன், நீரா லட்டு, நீரா கேக் போன்ற மக்கள் உடல் நலத்துக்கு உகந்த பொருள்களைத் தயாரிக்க இயலும். இந்தப் பொருள்கள், சர்க்கரை நோயாளிகளுக்கும் உகந்ததாகும். மேலும், நீரா உற்பத்தியின் மூலம் 2.40 லட்சம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது!