தரும்புரி மாணவிகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த 3 பேர் விடுதலைக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2000-ஆம் பிப்ரவரி மாதம் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-விற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக-வினர் தமிழகம் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர்.


இந்த கலவரத்தின் போது தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி பையூரில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையத்துக்குச் சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேருந்து எரிக்கப்பட்டது. இந்த விபத்தில் மாணவிகள் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகியோர் உடல் கருகி பலியாயினர். இந்த வழக்கு தொடர்பாக மாது, ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. 


பின்னர், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியதை அடுத்து, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது MGR நூற்றாண்டு விழாவை ஒட்டி பல்வேறு வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகின்றது.


அந்தவகையில் மாது, ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியது. தமிழக அரசின் இந்த பரிந்துரைக்கு தமிழக ஆளுநர் தற்போது ஒப்பதுல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஆளுநரின் ஒப்புதலை அடுத்து, வேலூர் சிறையிலிருந்து அவர்கள் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!