தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு - மீண்டும் எப்பொழுது?
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த சபாநாயகர்
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம், இந்த மாதம் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியவுடனே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உட்பட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தது. பின்னர் அவை 5 நாட்கள் நடத்துவது என சபாநாயகர் பி.தனபால் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது.
மறைந்த முன்னால் முதல்வர் மு.கருணாநிதி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போஸ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நெல் ஜெயராமன் உட்பட மறைந்த உறுப்பினருக்கு கடந்த 3 ஆம் தேதி இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இடைப்பட்ட நாட்களில் ஆளுநர் உரை மீதி விவாதம் நடைபெற்றது. ஆளுநர் உரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் தலா 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை கடந்த 4 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் கஜா புயல், ஸ்டெர்லைட், மேகதாது அணை மற்றும் விவசாயிகள் பிரச்சனை பற்றி சரியாக கையாளுவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது எனக்கூறி திமுக வெளிநடப்பு செய்தது.
இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது எனத் தெரிவித்து, தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் பி.தனபால் ஒத்திவைத்தார்.