தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் யூரியா உரத்தை பெறுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தமிழக அரசுக்கு கோரிக்கை..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் யூரியா உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு  ஏற்பட்டிருக்கிறது. இதனால் சம்பா நெல் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும்,  யூரியா தட்டுப்பாட்டைப் போக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.


காவிரியில் கடந்த 7 ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டிலும் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூனில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி செய்யப்படவில்லை. எனினும், சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும்  சம்பா சாகுபடி எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சம்பா நெற்பயிர் நடப்பட்டதிலிருந்து முதலில் 15 நாட்களிலும், பின்னர் 30-ஆவது மற்றும் 45-ஆவது நாட்களிலும் யூரியா  உரம் இட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால், காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் யூரியாவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது தவிர அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல்லுடன் மக்காச் சோளம், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களுக்கு இணையாக விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் எந்தவொரு மாவட்டத்திலும் தேவைக்கு ஏற்ப யூரியா உரம் வினியோகிக்கப்படவில்லை என்பது தான் உண்மையாகும்.


காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்வதற்காக அவ்வப்போது யூரியா அனுப்பப்படும் போதிலும், அவை யானைப்பசிக்கு சோளப்பொறியாகவே உள்ளன. உதாரணமாக, தஞ்சாவூருக்கு கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து 3,500 டன்னும், நவம்பர்  3-ஆம் தேதி தூத்துக்குடியிலிருந்து 1000 டன்னும் யூரியா உரம் வந்தது. அவை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அவை அனுப்பப்பட்ட நாளிலேயே விற்றுத் தீர்ந்து விட்டன. அதேபோல் தனியார் கடைகளுக்கு அனுப்பப்படும் யூரியாவை இறக்குவதற்கு முன்பாகவே விவசாயிகள் போட்டிப்போட்டு எடுத்துக் செல்கின்றனர்.


காவிரி பாசன மாவட்டங்களுக்கு இதுவரை வந்துள்ள யூரியாவைப் போன்று இன்னொரு மடங்கு யூரியா வந்தால் தான் உழவர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும். இல்லாவிட்டால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைய முடியாது. யூரியா தழைச்சத்து உரம் என்பதால் குறிப்பிட்ட நாட்களில் அதை போட்டால் தான் பயிர்கள் தழைத்து வளரும். செழித்து வளர்ந்த பயிரில் கதிர் வந்தால் தான் நெல் விளைச்சல் மிகவும் அதிகமாக இருக்கும். போதிய அளவில் மேலுரமாக யூரியா போடப்படாவிட்டால், நெற்பயிர்களின் வளர்ச்சி குறைந்து விடும். அத்தகைய பயிரில் கதிர் வந்தாலும் அதில் நெல் மணிகள் இருக்காது. சம்பா சாகுபடியில் நெல்லுக்கு பதிலாக வைக்கோல் மட்டுமே கிடைக்கும். இதனால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.


தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் ஓராண்டு கூட குறுவை சாகுபடி முழுமையாக செய்யப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் 4 பருவங்களில் மட்டும் தான் சம்பா சாகுபடி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.  இந்த பருவத்தில் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்தால் மட்டும் தான் உழவர்கள் கடந்த ஆண்டுகளில் வாங்கிய கடனின் ஒரு பகுதியையாவது அடைக்க முடியும். இல்லாவிட்டால் உழவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை தான் ஏற்படும். இதைத் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.


எனவே, பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் பேசி தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் யூரியா உரத்தை பெறுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் கரும்பு, வாழை சாகுபடி அடுத்த சில வாரங்களில் தொடங்கி விடும். அப்பயிர்களுக்கு அடியுரமாக பொட்டாஷ், டி.ஏ.பி ஆகிய உரங்கள் அதிக அளவில் தேவைப்படும் என்பதால் அவையும் போதிய அளவு இருப்பு வைக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.