தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான்; அதில் எந்தவித மாற்றமும் இல்லை: செங்கோட்டையன்
தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் எப்பொழுதும் இருக்கும். அதில் மாற்றம் என்பதே இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளி மற்றும் உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் தான் தமிழக பள்ளிகளில் கற்பிக்கப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
பள்ளி மற்றும் உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான நடைபெற்ற விவாதத்தில், திமுக சார்பில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், மும்மொழிக் கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார் திமுகவை சேர்ந்த சுரேஷ் ராஜன்.
சுரேஷ் ராஜன் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியது, தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. தமிழக பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் கற்பிக்கப்படும். மூன்றாவது மொழிக்கு இடம் இல்லை. மூன்றாவது மொழியை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும். அவ்வாறு தமிழக அரசு செய்து. இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு சார்பாக பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு பதில் அளித்தார்.