தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுகின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை ஆகிய காரணங்களால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் இன்றுதிட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். 


அதன்படி 50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியவுடனேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை பள்ளி கல்வி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.


மேலும் இந்த ஆண்டு ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


கோடை வெப்பம் கொளுத்தும் நிலையிலும் மாணவர்கள் புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வருகிறது. இன்னமும் பல மாவட்டங்களில் I00 டிகிரியைத் தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருவதால் பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிப் போகலாம் என்றும் செய்திகள் பரவின. 


ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.


பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில் ஒரு சில தனியார் பள்ளிகள் வருகிற 7-ஆம் தேதியும், சில தனியார் பள்ளிகள் 10-ஆம் தேதியும் திறக்கப்படும் என்று அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.